உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாதிப்பும் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலிக்கிறது.
தேவை அதிகரிப்பு, உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் உலகம் முழுவதுமே சமையல் எண்ணெய் விலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையாக உயர்ந்து வருகிறது. ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக சூரிய காந்தி எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது .உலக அளவில் சூரிய காந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் பங்கு 50 சதவீதமாகும். இதுமட்டுமின்றி உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா சூரிய காந்தி எண்ணெய் வர்த்தகத்தில் 25 சதவீதமாக உள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக சூரிய காந்தி எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்த தடையின் காரணமாகவும் எண்ணெய் வர்த்தகம் மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.
சோயாபீன், சூரியகாந்திக்கு தட்டுப்பாடு
இதுபோலவே சோயாபீன் எண்ணெய் தட்டுப்பாடும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தென் அமெரிக்காவில் நிலவும் வறட்சியான சூழலும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். பிரேசில், அர்ஜெண்டினா மற்றும் பாராகுவே நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சோயா எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 9.4% ஆக குறைந்துள்ள்ளது. கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைவான உற்பத்தி இதுவாகும்.
மேலும் கனடாவில் முக்கிய தாவர எண்ணெயான ரேப்சீட் எண்ணெய் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அங்கு நிலவும் வானிலை மாற்றம் முக்கியமாகும். ஏறக்குறைய 50 சதவீத அளவுக்கு உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுபோலவே உலக அளவில் மற்றொரு முக்கிய சமையல் எண்ணெயான பாமாயில் உற்பத்தியிலும் சிக்கல் நிலவுகிறது. இதனை அதிகமாக உற்பத்தி செய்யும் மலேசியா, இந்தோனேசியாவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பாமாயில் ஏற்றுமதியை பொறுத்தவரையில் இந்தோனேஷியா ஆண்டுக்கு 30 மில்லியன் டன்கள் அளவுக்கு உள்ளது. இந்த அளவானது உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் தாவர எண்ணெய் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காகும்.
இந்தோனேசியா தடை
பாமாயில் உற்பத்தியில் உலக அளவில் இந்தோனேஷியா 55 சதவீதமாகவும், மலேசியா 31.2 சதவீதமாகவும், நெதர்லாந்து 3.7 சதவீதமாகவும், ஜெர்மனி 1.2 சதவீதமாகவும், எஸ்டோனியா 0.7 சதவீதமாகவும், மற்ற நாடுகள் 8.2 சதவீதமாகவும் உள்ளன.
உலகம் முழுவதும் தாவர எண்ணெய்க்கு பெருமளவு தேவை ஏற்பட்டுள்ள நிலையில் பாமாயிலுக்கு அதிகமான தேவை உருவாகி வருகிறது. ஆனால் தேவைக்கு ஏற்ப பாமாயில் உற்பத்தியை பொறுத்தவரையில் தொழிலாளர் பற்றாக்குறை, எண்ணெய் வித்து உற்பத்தி குறைவு போன்ற காரணங்கள் உள்ளன. இதனால் உள்நாட்டு தேவைக்கு போதிய அளவு இல்லாததால் அங்கு போராட்டங்கள் தொடங்கின.
இதனால் இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்ததுடன் விலையையும் கணிசமாக உயர்த்தியது. இந்தோனேசியா கடந்த மார்ச் மாதம் பாமாயிலின் மீதான அதன் சில்லறை விலை உச்சவரம்பை தளர்த்தியது. அத்துடன் ஏற்றுமதியாளர்கள் 30% உள்நாட்டு சந்தை விற்பனைக் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. மேலும் ஏற்றுமதி வரியையும் கணிசமாக உயர்த்தியது. ஒரு டன்னுக்கு 175 டாலரில் இருந்து 375 டாலராக உயர்த்தியது.
பெரும் நெருக்கடிக்கு இடையே பாமாயில் ஏற்றுமதிக்கு நேற்று முன்தினம் முதல் (ஏப்ரல் 28-ம் தேதி) தடை விதித்துள்ளது. ஏற்கெனவே ரஷ்யா உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் பாமாயில் விலையும் உயர்ந்தால் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் விலையும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையால் அதன் விலை மார்ச் மாதத்தில் மட்டும் 25 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக பாமாயில் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
சமையல் எண்ணெய்க்கு ரேஷன்
இதுமட்டுமின்றி ரேப்சீட் எண்ணெய் விலை 55 சதவீதமும், உலகம் முழுவதுமே தாவர எண்ணெய் விலை 23 சதவீதம் உயர்ந்துள்ளது. விலை உயர்வு ஒருபுறம் என்றால் பற்றாக்குறையும் தொடர்ந்து உள்ளது. எவ்வளவு விலை கொடுத்தாலும் சமையல் எண்ணெய் கிடைக்காத சூழல் உள்ளது.
சமையல் எண்ணெய் தேவை உயர்ந்து வருவதால் பெட்ரோல் உள்ளிட்ட பிற தேவைக்காக பயன்படுத்தப்படும் தாவர எண்ணெயில் 15 சதவீதத்தை சமையல் எண்ணெய் பயன்பாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் திருப்பி விட்டுள்ளன. இதனால் ஜெர்மனி, பிரிட்டன், துருக்கி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் சமையல் எண்ணெய்க்கு விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதாவது ரேஷன் முறையிலேயே மக்களுக்கு சமையல் எண்ணெய் விநியோகிக்கப்படுகிறது. வர்த்தக நிறுவனங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ என்ற கட்டுப்பாட்டுடன் ரேஷன் முறையில் மட்டுமே மக்களுக்கு சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் விலை கடுமையாக உயரும்
உலக அளவில் சமையல் எண்ணெய்க்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதியை பொறுத்தவரையில் 13 மில்லியன் டன்களாாகும். உலக அளவில் அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
இதற்கு காரணம் இந்தியாவில் போதிய அளவு எண்ணெய் வித்துகள் உற்பத்தி இல்லாததே காரணமாகும். இந்தியாவில் பாரம்பரிய எண்ணெய் வித்துகளான கடலை, எள், தேங்காய் போன்றவற்றின் பற்றாக்குறையும் அதிகமாக உள்ளதால் பெருமளவு இறக்குமதியை நம்பியே இந்தியா உள்ளது.
இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயில் 60% ஆகவும், சோயாபீன் 25% ஆகவும், சன்பிளவர் 12% ஆகவும் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் அதிகஅளவு சமையல் எண்ணெய் நுகரும் நாடாக உள்ளது. இந்தியர் ஒருவருக்கு ஒரு ஆண்டுக்கு சராசரி சமையல் எண்ணெய் தேவை 19 கிலோ ஆகும்.
இந்தியாவில் அதிக நுகர்வு
இந்த அளவு அதிகமான நுகர்வு கொண்ட இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவை என்பது இயல்பானது. உள்நாட்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி போமான அளவு இல்லாததால் இறக்குமதியையை இந்தியா நம்பியுள்ளது. ஆனால் உலகம் முழுவதுமே சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை இருப்பதால் அதன் தாக்கம் வரும் காலங்களில் இந்தியாவிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியாவின் தடையால் அதிகஅளவு பாமாயில் இறக்குமதி செய்யும் இந்தியாவில் அதன் விலை கடுமையாக அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி மே மாதம் முதல் 3 லட்சம் முதல் 3.25 லட்சம் டன்னாக குறைந்தால், பாமாயில் விலை கடுமையாக அதிகரிக்கும்.
உடனடியாக பற்றாக்குறை தீர வாய்ப்பு இல்லாததால் விலை மேலும் உயரும் ஆபத்து உள்ளது. கடந்த ஓராண்டில் இரண்டு மடங்கு விலை உயர்ந்து விட்டது. தற்போது என்ன விலை கொடுத்தாலும் சமையல் எண்ணெய் கிடைக்காத சூழல் ஏற்பட்டால் இந்தியாவிலும் ரேஷன் முறை அமலாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.