‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும்’ பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா பகிர்ந்துள்ளார்.
அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘டிக்கிலோனா’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டது. நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இளையராஜா இசையில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்றிருந்த சூப்பர் ஹிட் பாடலான ‘பேர் வச்சாலும்’ பாடலை ரீமிக்ஸ் செய்து இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பயன்படுத்தியிருந்தார். இப்பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் எனப் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது இப்பாடல் யூடியூப் தளத்தில் 1.2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின்போது ‘பேர் வச்சாலும்’ பாடல் உருவான விதம் குறித்து இளையாராஜா பேசும் வீடியோ ஒன்றை யுவன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் இளையராஜா கூறியுள்ளதாவது:
”இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவும், கமல்ஹாசனும் இப்பாடல் உருவாக்கத்தின்போது ஸ்டுடியோவுக்கு வந்திருந்தார்கள். ட்யூன் போட்டு முடித்துவிட்டோம். கவிஞர் வாலியை அழைத்து ட்யூனைப் பாடிக் காட்டினேன். அதற்கு அவர் இப்படியெல்லாம் பாடிக் காட்டினால் எப்படிப் பாட்டு எழுதுவது என்று கேட்டார்.
உடனே நான் ‘துப்பார்க்குத் துப்பாய ’ என்று தொடங்கும் குறளை அந்த ட்யூனுக்கு ஏற்றபடி பாடிக் காட்டினேன். அந்தக் குறளில் இருக்கும் அழுத்தம் அந்தப் பாடலில் இருக்க வேண்டும் என்று கூறினேன். இப்படி உருவானதுதான் ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடல்”.
இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.