காவல்துறை யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு காவலர் செய்யக்கூடிய தவறு, இந்த ஆட்சியின் தவறாக குற்றம்சாட்டப்படும். சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுத்திருந்தாலும், ஆட்சி மீதுதான் கறையாக அந்த சம்பவம் பேசப்படும். எனவே காவல்துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும், விமர்சனத்துக்கு இடமில்லாமல் தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது.
முன்னதாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த ஆட்சியில் வன்முறைகள் இல்லை, சாதிச் சண்டைகள் இல்லை, மத மோதல்கள் இல்லை, துப்பாக்கிச் சூடுகள் இல்லை, அராஜகங்கள் இல்லை இதுதான் இந்த ஆட்சியின் மிகப்பெரும் சாதனை. இதுதான் இந்த ஆட்சியின் உள்துறையின் மிக முக்கியமான சாதனையாக அமைந்திருக்கிறது.
தமிழக மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கான அடித்தளத்தை, அமைத்து தந்துள்ளோம். இந்த அமைதியை உருவாக்கித் தந்தது, தமிழக அரசின் காவல்துறை. இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான், வெளி மாநிலங்களுக்குச் சென்ற தொழிற்சாலைகள் இன்று தமிழகத்துக்கு மீண்டும் திரும்ப வந்துகொண்டிருக்கிறது. புதிய முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் தமிழகம், பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்ற நற்பெயர் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், இன்னொரு கை காவல்துறை. இந்த இரண்டும் முறையாக, சரியாகச் செயல்பட்டால், அந்த அரசாங்கம் தலைச்சிறந்த அரசாங்கமாக இருக்கும். அந்த வகையில் காவல்துறைக்கு சில கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறேன். காவல்துறை என்றாலே குற்றங்களைத் தடுக்கும் துறையாக, தண்டனை வாங்கித் தரக்கூடிய துறையாக இறுக்கிறது என்று அனைவரும் நினைக்கிறார்கள். காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கித் தரக்கூடிய துறையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, இந்த அரசினுடைய கொள்கை.
குற்றங்கள் குறைய வேண்டும் என்பதைவிட குற்றங்களே நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக அது மாறவேண்டும். கொலை, திருட்டு, பாலியல் தொந்தரவு, போதை மருந்துகள், வன்முறைச் சம்பவங்கள் ஆகியவைதான் மிகப்பெரிய குற்றங்கள். இவை எந்தச் சூழலிலும் நடைபெறாத வகையில் காவல்துறை திட்டமிடுதல் வேண்டும். எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அரசியல் ரீதியாகவோ, மதம் மற்றும் சாதி காரணமாகவோ வன்முறைகள் உருவாகமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி திட்டமிட்டு இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் மோதல்களை உருவாக்க நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதேநேரத்தில் காவல்துறையை யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாகவும் இருக்க வேண்டும்.
எங்கோ ஒரு காவலர் செய்யக்கூடிய தவறு, இந்த ஆட்சியின் தவறாக குற்றம்சாட்டப்படும். சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுத்திருந்தாலும், ஆட்சி மீதுதான கறையாக அந்தச் சம்பவம் பேசப்படும். எனவே காவல்துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும், விமர்சனத்துக்கு இடமில்லாமல் தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும். எந்த திசையிலிருந்து அழுத்தங்கள் வந்தாலும், சிபாரிசு வந்தாலும் நீங்கள் சட்டத்தின் பக்கமே நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.