ஒமைக்ரான் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு என தனி தடுப்பூசி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் மார்ச்சில் அது பயன்பாட்டுக்கு வருமென்றும் ஃபைஸர் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஃபைஸர் தலைமைச் செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “பல்வேறு அரசுகளும் வேகமாகப் பரவும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரத்யேக தடுப்பூசியைக் கேட்டுவருவதால் இந்தத் தடுப்பூசியை தயார் செய்து வருகிறோம். இந்த தடுப்பூசி மார்ச்சில் தயாராகிவிடும். ஆனால் இது நமக்குத் தேவைப்படுமா? இல்லை இது எப்படிப் பயன்படுத்தப்படும் எனத் தெரியாது” என்று அவர் கூறினார்.
மேலும், “இப்போது உள்ள தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ்களுமே கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பைத் தருகிறது. அதேவேளையில் ஒமைக்ரானுக்கு என தனியாக தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதன் மூலம் பிரேக்த்ரூ தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம்” என்றார்.
இதேபோல் மாடர்னா சிஇஓ ஸ்டெஃபானி பான்செல் அளித்தப் பேட்டி ஒன்றில் “ஒமைக்ரான் மட்டுமல்லாது இனி ஏதும் புது உருமாறிய வைரஸ் வந்தாலும் எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசியைத் தயாரித்து வருகிறோம்.
அதனை இந்த ஆண்டிலேயே கொண்டு வருவோம். இருப்பினும் இப்போதைக்கு பூஸ்டர் டோஸ்கள் தான் சிறந்தது என உலக சுகாதாரத் தலைவர்களுக்கு வலியுறுத்தி வருகிறோம் ” என்று கூறினார்.