உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் கைதைக் கண்டித்து புதுச்சேரியில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரி பகுதியில் நடந்த போராட்டத்தில் நடந்த வன்முறையில் 8 விவசாயிகள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காந்தி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

பிரியங்கா கைதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸார் மறியல் போராட்டம் நடத்தினர். புதுவையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காமராஜர் சிலை அருகே திடீர் மறியல் நடத்தினர். கைது செய்யப்பட்ட பிரியங்காவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி ஆகியோரைக் கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், காங்கிரஸ் பொதுச் செயலர்கள், நிர்வாகிகள் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக நாராயணசாமி கூறுகையில், “விவசாயிகள் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ராஜினாமா செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட காங்கிரஸாரை விடுவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.