ஆஸ்திரேலியாவில் அதானி குழுமத்தின் நிலக்கரிச் சுரங்கமான கார்மிச்சேல் சுரங்கப்பகுதியில் வசிக்கும் பூர்வக்குடி மக்களை வெளியேற்ற மாட்டோம் என்று ஆஸ்திரேலிய போலீஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தி கார்டியன் என்ற ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியின் படி வாங்கன் மற்றும் ஜகலிங்கூ பழங்குடியினர் அங்கு காலங்காலமாக வாழ்ந்து வரும் ஒரு மரபான இனக்குழுவினர் ஆவார்கள். இவர்கள் நிலக்கரிச் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பண்பாட்டு விழா ஒன்றை இந்த பூர்வக்க்குடியினர் தொடங்கியுள்ளனர். இந்தக் குழுவை அதானி குழுமம் புதைபடிவ எரிபொருளுக்கு எதிரான போராட்டக்காரர்கள் என்று வர்ணித்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் பேசிய ஆடியோ ஒன்றை தி கார்டியன் பெற்றுள்ளது, அதில், போலீசார், பழங்குடி மக்களிடம், “உங்கள் பண்பாட்டுடனான தொடர்பு மறைந்து வருகிறது. நீங்கள் அதை இழக்க விரும்பவில்லை. இப்போதைக்கு நீங்கள் இங்கு உங்கள் பண்பாட்டை வாழ்ந்து வருகிறீர்கள். இது மனித உரிமைகளின் கீழ் நடக்கிறது. எனவே உங்களை இங்கிருந்து அனுப்ப நாங்கள் முடிவெடுக்க மாட்டோம். எங்கள் நோக்கமே உங்களுக்கு ஆதரவு அளிப்பதுதான்” என்று கூறியுள்ளது வெளியாகி வைரலாகியுள்ளது.

மேலும் உங்கள் மீது அதானி குழுமம் புகார் அளித்தது, நாங்கள் அதற்காக ஒன்றும் செய்ய மாட்டோம், அதானி வேண்டுமானால் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றட்டும் என்றும் அவர்கள் பழங்குடியினரிடம் தெரிவித்துள்ளனர். குவீன்ஸ்லாந்து போலீஸ் பூர்வக்குடிகளை வெளியேற்ற மாட்டோம் என்று கூறியதையடுத்து அதானி குழுமத்துக்கு சிக்கல்கள் அதிகரித்துள்ளது.

அதானி குழுமம் இந்த பழங்குடியினத்திரடையே நில பயன்பாட்டு உடன்படிக்கை மேற்கொண்டாலும் சில நில உரிமையாளர்கள் நிலக்கரி தோண்ட சம்மதம் தெரிவிக்காமல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சுரங்கத்துக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2010-ல் சுரங்க நடவைக்கைகளுக்காக இந்த இடங்களை வாங்கிய அதானி குழுமம் 2014-ல் உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டும். 2022 வாக்கில் 60 மில்லியன் டன்கள் நிலக்கரி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது, ஆனால் இன்னும் உற்பத்தி தொடங்க முடியவில்லை.

போராட்டத்தினால் காப்பீடு, வங்கிகள் அதானி குழுமத்தின் முயற்சியிலிருந்து பின் வாங்கியுள்ளதும் இந்த நிலகரித்திட்டத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.