கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழை ஒரே மாதிரியாக வழங்க வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்குங்கள் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் கவுரவ்குமார் பன்சால், ரீபக் கன்சால் இருவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு கடந்த ஜூன் 30-ம் தேதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், “கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அடுத்த 6 வாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும்.

கரோனாவால் உயிரிழந்தவர்களுக்குக் குறைந்தபட்ச இழப்பீடுகூட வழங்காவிட்டால், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தனது கடமையிலிருந்து தவறியதாகக் கொள்ளப்படும்” எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பளித்த நீதிபதி அசோக் பூஷன் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்.

இந்த உத்தரவு மீது உரிய முடிவு எடுக்கவும், கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்று, இழப்பீடு குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க கூடுதலாக 4 வாரம் அவகாசம் கேட்டு கடந்த மாதம் 16-ம் தேதி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது.

இந்நிலையில் இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர் ஷா, அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒரே மாதிரியான இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்குத் தேவையான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்க கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் வழங்குகிறோம்.

இது தொடர்பாக ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கையை எடுங்கள், இப்படியே தாமதித்தால் 3-வது அலையும் முடிந்துவிடும். வரும் 11-ம் தேதிக்குள் மத்திய அரசு இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். வரும் 13-ம் தேதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்” என உத்தரவிட்டனர்.