சென்னை: பொன்விழா ஆண்டை கொண்டாடிவரும் அதிமுக, ‘ஒற்றைத் தலைமை’ என்ற வடிவில் மீண்டும் சோதனைக் காலத்தை எதிர்கொண்டிருப்பது கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆர் ஆதரவுடன் முதல்வரான மு.கருணாநிதி, கால மாற்றத்தில் 1972-ம் ஆண்டு திமுகவில் இருந்து எம்ஜிஆரை வெளியேற்றினார். அதே ஆண்டு அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் 1977-ம் ஆண்டு ஆட்சியை பிடித்து தமிழக முதல்வரானார்.
1987-ல் எம்ஜிஆர் மறைந்தார். அதன்பிறகு, ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக பிளவுபட்ட அதிமுக, 1988-ல் ஆட்சியை இழந்தது. 1989 தேர்தலின்போது, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு அதிமுகவின் இருஅணிகளும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டன. அதிமுக பிளவுபட்டிருந்த சூழலில், திமுக எளிதாக வெற்றி பெற்றது. அதிமுக தனது கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதினர்.
அந்த நேரத்தில், கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றிய ஜெயலலிதா, 1991-ல் ஆட்சியை பிடித்தார். 2001, 2011, 2016 தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதல்வரானார்.
2016-ல் ஜெயலலிதா மறைந்த பிறகு, 2017-ல் ஓபிஎஸ், சசிகலா, தீபா தலைமையில் அதிமுகவில் அணிகள் பிரிந்தன. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன் அணிகள் செயல்பட்டன. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஒரு மாதம்கூட நீடிக்காது என்றும் கருத்துகள் எழுந்தன.
பாஜகவின் தலையீட்டால் ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தன. அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து, 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் 9 இடங்களில் வென்று, ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதுடன், 5 ஆண்டு ஆட்சியையும் நிறைவு செய்தது.
இப்படி பல சோதனைகளை கடந்து வந்த அதிமுகவுக்கு தற்போது ‘ஒற்றைத் தலைமை’ என்ற வடிவில் மீண்டும் ஒரு சோதனை வந்துள்ளது.
கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, எம்ஜிஆர், ஜெயலிதாவுடன் பணியாற்றிய மூத்த தலைவர்கள் 14 பேர் கொண்ட உயர்நிலை குழுவை அமைத்து, அக்குழு எடுக்கும் முடிவை மட்டுமே செயல்படுத்துபவராக ஒருங்கிணைப்பாளர்கள் இருக்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்புக்கு கோரிக்கை வைத்திருப்பதாக கூறியுள்ளார். மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் இபிஎஸ்ஸூக்கு தெரியாமல் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழ வாய்ப்பில்லை. அதனால் இந்த விவகாரத்தில் ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை இபிஎஸ் ஏற்பது சந்தேகமே என்பதே கட்சியினரின் கருத்தாக உள்ளது.