இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் அதிரித்துக் கொண்டே உள்ளதாக உலக வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் வெப்ப அலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையமும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்து வந்தனர். இந்தியாவில் வழக்கமாக மே மற்றும் ஜூன் மாதங்களின்தான் வெப்ப அலை வீசும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெப்ப அலை வீசத் தொடங்கிவிட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் சராசரி வெப்பநிலை, கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதைப்போன்று ஏப்ரல் மாதமும் இந்தியாவில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.
ஏப்ரல் மாதம் இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகினது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி இந்தியாவில் கடந்த மாதம் 50-க்கு மேற்பட்ட இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 43.4 டிகிரி செஸ்சிஸ் வெப்பம் பதிவானது.
இந்நிலையில், மே மாதம் இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 45 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இது தொடர்பாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கைக் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில் “இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கடந்த சில நாட்களாக 45 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் 50 டிகிரி செல்சியஸை நெருங்கியுள்ளது. எனவே, சுகாதாரம் மற்றும் வெப்ப அலை திட்டங்கள் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.