நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நேற்று (14.5.2022) இரவு சுமார் 11.30 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமிதிப்பான்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஆறு நபர்கள் (முருகன், விஜய், செல்வம், முருகன், ராஜேந்திரன், செல்வகுமார்) சிக்கியுள்ளனர்.
அதில் இருவர் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்விபத்தில் சிக்கியுள்ள செல்வம், முருகன், செல்வகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். மேலும், மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு, துரிதப்படுத்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் கனிமவளத் துறை இயக்குநர் ஆகியோரை அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் சிக்கியுள்ள நபர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்புப்பணிகளுக்கு உதவிட தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் அரக்கோணத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.