மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவியிடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்குட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆம் தேததிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் அக்டோபர் 9ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (நேற்று) தொடங்கியது. அலுவலக நாட்களில் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 200 ரூபாயும், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 600 ரூபாயும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1000 ரூபாய் வைப்புத்தொகையும் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த வேட்பாளர்கள் இதில், 50 சதவீதத் தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 69 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதில், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான படிவங்களை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். முதல் நாளில் அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் யாரும் வராத நிலையில், சுயேச்சையாக களமிறங்கும் வேட்பாளர்களே மனுக்களை வாங்க ஆர்வம் காட்டினர்.
இதேபோன்று மானூர் ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான படிவங்களை ஏராளமானவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். தேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு கிராமப் பகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மானூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பானுப்பிரியா தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதேபோல தேர்தல் கண்காணிப்புப் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள ஐந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியத்திலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட ஒன்பது ஒன்றியங்களில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனினும் சுயேச்சையாக போட்டியிடும் ஒருசில வேட்பாளர்கள் மட்டும் வேட்பு மனுக்களை பெற்றுச் சென்றனர்.
இதேபோன்று விழுப்புரம், காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு முதல் நாளில் குறைவான அளவிலே வேட்புமனு விநியோகம் நடைபெற்றது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டியில் 9 மற்றும் 15வது வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவனிடம் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த மணிகண்டனின் மனைவி ஐஸ்வர்யா, முருகனின் மனைவி பத்மாவதி, தனபாலின் மனைவி மங்கையர்க்கரசி ஆகியோர் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதேபோல், திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் தொடங்கியுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் புகார்கள் தெரிவிக்கும் வண்ணம் புகார் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.