உக்ரைன் படைகளுக்கு ஆயுத விநியோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த 6 ரயில் நிலையங்களை குண்டுவீசி சேதப்படுத்தியதாக ரஷ்யா கூறியுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தது. அப்படி நேட்டோவில் சேர்ந்தால், அது தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்யா கூறியது. மேலும், நேட்டோவில் சேர கூடாது என்று உக்ரைனை ரஷ்யா தொடர்ந்து எச்சரித்து வந்தது. அதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கவில்லை.
இதையடுத்து உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்துள்ளன. என்றாலும் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் கடும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் படைகளுக்கு மேற்கத்திய நாட்டு ஆயுதங்கள் ரயில்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
கிழக்கு உக்ரைனில் இந்த ஆயுத விநியோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த 6 ரயில் நிலையங்களின் மின்சார விநியோக மையங்கள் குண்டுவீசி தகர்க்கப்பட்டன. இதன்மூலம் இந்த ரயில் நிலையங்கள் இயங்க முடியாமல் முடக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.
இந்த ரயில் நிலையங்கள் வழியே எந்த நாட்டின் ஆயுதங்கள் உக்ரைன் படைகளுக்கு வழங்கப்பட்டன என்ற தகவலை ரஷ்யா தெரிவிக்கவில்லை.
வெடி மருந்துகள் மற்றும் பீரங்கி ஆயுதங்களை கொண்ட 4 சேமிப்பு கிடங்குகள் உட்பட 40 உக்ரேனிய ராணுவ இலக்குகளை தாக்கியதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவின் இந்த தகவலுக்கு உக்ரைன் இதுவரை பதில் அளிக்கவில்லை.