சென்னை அடையாரில் உள்ள சத்யா ஸ்டுடியோ நிறுவனத்துக்கு தமிழக அரசு கடந்த 1968-ல்93, 540 சதுர அடி நிலத்தைகுத்தகைக்கு வழங்கியது.
1998-ல் குத்தகைக் காலம் முடிவடைந்த நிலையில், மேலும் 10 ஆண்டுகளுக்கு குத்தகை நீட்டிக்கப்பட்டது. 2004-ல் குத்தகை பாக்கி ரூ. 31 கோடியை செலுத்தக் கோரி, மயிலாப்பூர் வட்டாட்சியர் சத்யா ஸ்டுடியோ நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
ஆனால், குத்தகை செலுத்தாதால் 2008-ல் அந்த நிலத்தை திருப்பி எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சத்யாஸ்டுடியோ நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையில், 2019-ல் பசுமை வழிச் சாலை மற்றும் டி.ஜி.தினகரன் சாலை ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சத்யா ஸ்டுடியோ வசமுள்ள அரசு நிலம் வழியாக துர்காபாய் தேஷ்முக் சாலைக்கு இணைப்புச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், வழக்கு காரணமாக, அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் யோகேஷ் கண்ணதாசன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, அரசுக்குச் செலுத்தவேண்டிய ரூ.31.10 கோடி நிலுவைையை சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்திடமிருந்து வசூலிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் 3 மாதங்களில் முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
சாலை பணியை தொடரலாம்: மேலும், சத்யா ஸ்டுடியோ வசமுள்ள நிலத்துக்கு வேலி அமைத்துப் பாதுகாக்கவும், கடந்த 2019-ம் ஆண்டு திட்டப்படி இணைப்புச் சாலை அமைக்கும் பணியைத் தொடரவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.