முன்னணி இயக்குநர்கள் தொடங்கியுள்ள ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம் மேனன், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் பலரும் ஒன்றிணைந்து ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம், படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ், குறும்படங்கள் உள்ளிட்ட பல விஷயங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்புப் பணிகள் மும்முரமாக நடந்து வருவதால் அப்படத்தை முடித்துவிட்டு ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’ நிறுவனத்துக்கான பணிகளைத் தொடங்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் சூர்யாவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சூர்யா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.