4 மணி நேரமும் வணிக நிறுவனங்கள், கடைகள் திறந்திருப்பதற்கான அனுமதி கடந்த 05 ஜூன் 2019ல் வெளியிடப்பட்டது. அப்போது 3 ஆண்டுகாலத்திற்கு மட்டும் இந்த நடைமுறை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 24 மணி நேரமும் கடைகள் திறந்திருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசிதழில் 05.06.2022 முதல் 3 வருட காலத்திற்கு, ஆண்டின் அனைத்து நாட்களிலும் 24/7 திறந்திருக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி அடிப்படையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பணியாளரின் விவரங்களும் நிறுவன உரிமையாளரால் காட்சிப்படுத்தப்பட வேண்டும். ஊழியர்களின் ஊதியம், கூடுதல் நேர ஊதியம் சேமிப்பு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். எந்த ஒரு ஊழியரும் 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியாளர்கள் விடுமுறையிலோ அல்லது பணி நேரத்திற்குப் பிறகோ பணிபுரிவது கண்டறியப்பட்டால், நிறுவனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெண் ஊழியர்கள் இரவு 8.00 மணிக்கு மேல் வேலை செய்யத் தேவையில்லை. பெண் ஊழியர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்ற பிறகு, அவர்களின் பாதுகாப்பிற்கு போதுமான சூழ்நிலையை வழங்கி இரவு 8.00 மணி முதல் காலை 6.00 மணி வரை பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஷிப்டுகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும். போக்குவரத்து வசதிகள் இருப்பதைக் குறிக்கும் வகையில், நிறுவனத்தின் முக்கிய நுழைவாயிலில் காட்சிப்படுத்த வேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வறை, கழிவறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும். பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்க, புகார் குழுவை ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.