சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி இன்று(நவ. 5) காலாமானார். அவருக்கு வயது 106.
நாடு சுதந்தரம் அடைந்த பிறகு முதல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 1952, ஜனவரி – பிப்ரவரியில் நடைபெற்றது. எனினும், அந்த சமயத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் கடும் மழையும், பனிப்பொழிவும் இருக்கும் என கருதப்பட்டதால் அங்கு முன்கூட்டியே, அதாவது 1951, அக்டோபர் 25ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்றைய தினம் நடத்தப்பட்ட வாக்குப்பதிவில், கின்னோர் மாவட்டத்தின் கல்பா கிராமத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி முதல் வாக்காளராகச் சென்று வாக்களித்து தனது ஜனநாயக் கடமையை ஆற்றினார். இதன்மூலம், சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் அவர் என அறியப்பட்டார்.
அதுமுதல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் என ஒவ்வொரு தேர்தலிலும் ஷியாம் சரண் நேகி தவறாமல் வாக்களித்து வந்தார். தற்போது ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வரும் 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாவட்ட அதிகாரிகள் அவரைத் தொடர்பு கொண்டு தபால் வாக்கு செலுத்த விருப்பமா என கேட்டுள்ளனர். அதனை மறுத்துவிட்ட ஷியாம் சரண் நேகி, வாக்குச்சாவடிக்கு நேரில் சென்றே வாக்களிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார். இந்நிலையில், திடீரென அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால், தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அதற்கான ஏற்பாடு மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2ம் தேதி, ஷியாம் சரண் நேகி முதல்முறையாக தனது வாக்கினை தபால் வாக்காக செலுத்தினார். இது அவர் வாக்களித்த 34வது பேரவைத் தேர்தல் வாக்காகும். அன்றைய தினம், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனைவரும் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னோரி ட்ரம் இசை இசைக்க, மாநிலத்தின் தனித்துவமான தொப்பியை அணிந்து கொண்டு ஷியாம் சரண் நேகி வாக்களித்தார். இதையடுத்து அவரது விரலில் மை தடவப்பட்டது. வாக்களித்ததற்கான அந்த அடையாளத்தைக் காட்டியவாறு அவர் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது பேசிய ஷியாம் சரண் நேகி, “மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு நாடு சுதந்திரம் பெற்றது. இதன்மூலம் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டுள்ளோம். கோயில் திருவிழாக்களைப் போல் கருதி மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கும் மிகவும் மதிப்பு மிக்கது. வாக்களிப்பதன் மூலம்தான் நல்லவர்களை நாம் தேர்வு செய்ய முடியும்” என தெரிவித்தார்.
1951ல் இருந்து தேர்தலில் வாக்களித்து வரும் ஷியாம் சரண் நேகியை, 2010ம் ஆண்டு அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி நவின் சாவ்லா, கல்பா கிராமத்திற்குச் சென்று அவரை கவுரவித்தார். இதையடுத்து, 2014ம் ஆண்டு இமாச்சலப் பிரதேச தேர்தல் ஆணையம் இவரை தங்கள் தூதராக நியமித்தது. சுதந்திர இந்திய வரலாற்றின் பாரம்பரிய அடையாளங்களில் ஒருவராக மாறிப்போன ஷியாம் சரண் நேகி, தனது 106வது வயதில் தனது சொந்த கிராமமான கல்பாவில் காலமானார். அவரது மறைவுக்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஷியாம் சரண் நேகியின் மறைவு வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மிக முக்கிய கடமைகளில் ஒன்றான வாக்கு செலுத்துவதை தவறாமல் செய்து வந்த அந்த மாமனிதரின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.