கடந்த 35 ஆண்டுகளுக்கு பிறகு பட்டு நூல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளதாக சிறுமுகை பட்டு நெசவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாட்டில் விவசாயத்துக்கு அடுத்துள்ள மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாக ஜவுளித்துறை உள்ளது. அதிகளவில் வேலை வாய்ப்பை அளித்து வருகிறது இத்துறை. ஜவுளித் துறையில் அதிக மதிப்பு மிக்க மற்றும் லாபம் தரக்கூடிய உற்பத்தியானது, பட்டு நெசவு தான். தமிழகத்தில் பட்டு உற்பத்தியில் காஞ்சிபுரம் முதலிடத்திலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி 2-ம் இடத்திலும், கோவை மாவட்டத்தின் சிறுமுகை 3-ம் இடத்திலும் உள்ளன.
கோவை மாவட்டம் சிறுமுகையில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகள், இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை வர்த்தகம் நடைபெறுவதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தற்போது பருத்தி மற்றும் நூல் விலை உயர்ந்துள்ள நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டு நூல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதாக சிறுமுகை பட்டு நெசவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமுகை கைத்தறி பட்டு நெசவாளரும், தேசிய கைத்தறி பயிற்சியாளருமான வி.காரப்பன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
பருத்தி மற்றும் நூல் விலை உயர்ந்துள்ள நிலையில், பட்டு நூல் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த 1987-ம் ஆண்டு பட்டு நூல் விலை கிலோவுக்கு ரூ.200-ல் இருந்து ரூ.2,000 வரை உயர்ந்தது. அதேபோல பட்டுக்கூடு விலையும், கடுமையாக உயர்ந்தது. அந்தக் காலத்தில் பட்டு ஆடைகள் விலை கடுமையாக உயர்ந்தன.
35 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பட்டு நூல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் பட்டுக்கூடு கிலோ ரூ.200 என்ற அளவில் இருந்து, தற்போது ரூ.800 வரை உயர்ந்துள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன் கிலோ ரூ.1000 வரை உயர்ந்து தற்போது சற்றே குறைந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ. 2,000-ல் இருந்து தற்போது ரூ.8,000 ஆக விலை உயர்ந்துள்ளது.
இதன்காரணமாக பட்டு சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளன. பட்டு நூல் மற்றும் பருத்தி நூல் விலையை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நெசவுத் துறை சார்ந்த நிர்வாகிகள், டெல்லிக்கு சென்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் சாதகமான பதில் கிடைக்கவில்லை.
இதேநிலை தொடர்ந்தால் தொழில் பாதிப்பு என்பதைவிட, பாமர மக்கள் பட்டு சேலை வாங்கி உடுத்த இயலாத நிலை ஏற்பட்டு விடும். கைத்தறி உற்பத்தித் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க வேண்டும்.