“திமுக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய கடுமையான அதிருப்தியை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக அவர்கள் எடுத்திருக்கும் உத்திதான் சமூக நீதி கூட்டமைப்பு” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் அஞ்சலி: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 53-ஆவது நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பொன்னையன், முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர். கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக , வழக்கமாக அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் நடத்தப்படும் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ” 1967-ஆம் ஆண்டுக்கு முன்பாக அன்றைக்கு இருந்த எதேச்சதிகார அரசு, குறிப்பாக காங்கிரஸ் அரசாங்கம் தமிழகத்தை தாழ்ந்த நிலைக்கு கொண்டு போயிருந்த நிலையில், தாழ்ந்து கிடந்த தமிழகத்தை தலைநிமிரந்ததாக உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு தமிழக முதல்வராக பொறுப்பேற்று பல்வேறு திட்டங்கள் எல்லாம் ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வந்தவர் அண்ணா.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, குறிப்பாக ஓர் உத்தியைக் கையாள்கிறார். அதாவது மக்களை திசை திருப்புகின்ற உக்தி. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, மக்கள் எதிர்பார்க்கின்ற ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. நம்பிக்கை மோசடிக்கு திமுக அரசாங்கம் ஆளாகியுள்ள நிலையில், மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத ஓர் இயலாமை, அதை மறக்கடிக்க வேண்டும் என்பதற்காக அதிமுக அமைச்சர்கள், முன்னோடிகளுக்கு எதிராக ரெய்டு நடத்துவது ஓர் உத்தி.
அதேபோன்று தேர்தல் காலங்களில் திமுக எப்போதும் தமிழினம், சமூக நீதியை எடுத்துக் கொள்வார்கள். இந்த இரண்டு குறித்தும் பேச இவர்களுக்கு தகுதி கிடையாது. முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்தச் சம்பவம் ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி உலகத் தமிழர்கள் மனதிலும், இன்றைக்கு அதுவொரு ஆறாத வடுவாக இருந்து வருகிறது.
இன்றைக்கு என்ன சமூக நீதிக்கு ஆபத்தா, அதை அதிமுக பாதுகாத்து வைத்துள்ளது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உருவாக்கினார். அதேபோல பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடு அன்றைக்கு உருவாக்கப்பட்டுவிட்டது. உச்ச நீதிமன்றம் மண்டல் கமிஷன் மூலமாக, இந்தியா முழுவதும் 50 சதவீதத்துக்கும் மேல் இடஒதுக்கீடு செல்லக்கூடாது என தீர்ப்பளித்தபோது, எதிர்த்த ஒரே மாநிலம் தமிழகம். ஒட்டுமொத்தமாக 69 சதவீத இடஒதுக்கீட்டு பாதுகாப்பு வழங்கிய ஒரே முதல்வர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அன்றைக்கு அனைத்து மாநில முதல்வருக்கும் அவர் கடிதம் எழுதினார். இதற்காக சமூக நீதி காத்த வீராங்கனை என்று பட்டமளித்தவர் கி.வீரமணி.
சமூக நீதி, சமூக பாதுகாப்பு என்று சொன்னாலே அதுதொடர்பான திட்டங்களைக் கொண்டுவந்தவர்கள் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான். திமுக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய கடுமையான அதிருப்தியை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, அவர்கள் எடுத்திருக்க உத்திதான் சமூக நீதி.
தான் தமிழன் என்று சொல்வதற்கே ராகுல் காந்திக்கு முகாந்திரம் இல்லை. திமுகவுடன் சேர்ந்து தமிழனத்தையே முடித்தவர்கள். வரலாறே மன்னிக்காது. ஒன்றரை லட்சம் தமிழர்களின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது. தமிழனத்தையே கொன்று விட்டு தமிழன், தமிழன் என்று பேசினால் தமிழர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.