நீட் விலக்கு மசோதா தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.
அதனடிப்படையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுஅமைக்கப்பட்டு, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது. பின்னர், நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அக்குழு சமர்ப்பித்தது.
தொடர்ந்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த செப்.13-ம் தேதி சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. பாஜக தவிர்த்து, மற்றஅனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்கள்ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் அவ்வப்போது ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின்பொதுச் செயலரும், கல்வியாளருமான பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் தற்போதைய நிலை குறித்தும்,அதன் மீது ஆளுநரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் மாளிகையில் தகவல் கோரியிருந்தார்.
அதற்கு ஆளுநரின் சார்பு-செயலரும், ஆளுநர் மாளிகை பொது தகவல் அதிகாரியுமான எஸ்.வெங்கடேஷ்வரன் கடந்த 17-ம் தேதி அளித்துள்ள பதிலில், சட்ட மசோதா தொடர்பான கோப்பு பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், நீட் விலக்கு மசோதா மீது, ஆளுநர் இன்னும்முடிவெடுக்கவில்லை என்றும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பவில்லை என்றும் தெரியவந்துள்ளது.