பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பின்னணி முதல் அரசியல் அனுபவம் வரையில் மட்டுமின்றி கல்வி, விளையாட்டு, அரசியலில் அவர் செய்த சாதனைகள் என ஒரு பட்டியலுடன் அன்புமணியின் பயோ-டேட்டாவையும் வெளியிட்டுள்ளது பாமக. அதன் விவரம்:
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸின் பூர்விக கிராமம் – விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்திற்குபட்ட கீழ்சிவிறி ஆகும்.
குடும்பம்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் – சரஸ்வதி இணையரின் இரண்டாவது வாரிசாக அன்புமணி ராமதாஸ் 09.10.1968 அன்று புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் பிறந்தார்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸின் உடன்பிறந்தவர்கள் இரு சகோதரிகள். மூத்த சகோதரி ஸ்ரீகாந்தி பரசுராமன். இளைய சகோதரி கவிதா ஜெயகணேஷ். இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர் இவர்.
மனைவி முனைவர் சவுமியா அன்புமணி ராமதாஸ். இவர் பசுமைத் தாயகம் அமைப்பில் தலைவராக 2004-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் படித்து சான்றிதழ் பட்டம் பெற்றவர். மகளிர் முன்னேற்றம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் இவருக்கு ஈடுபாடு உண்டு. மகளிர் முன்னேற்றம் குறித்து இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
கல்வி: மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தொடக்கத்தில் திண்டிவனத்தில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் சேர்ந்து, அங்கு முதலாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் ஏற்காட்டில் உள்ள புனித இருதய மகளிர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தார். தொடர்ந்து ஏற்காட்டில் உள்ள மான்ட்ஃபோர்ட் ஆங்கிலோ இந்திய பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தார்.
11 மற்றும் 12ம் வகுப்புகளை திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 12ம் வகுப்பில் விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களிலும் முதல் மாணவராக அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அதனால் அவருக்கு பொதுப்போட்டி பிரிவில் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அங்கு அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று மருத்துவர் ஆனார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்ட்ரோடக்டரி மேக்ரோ எக்கனாமிக்ஸ் படித்தார்.
மருத்துவர்: மருத்துவர் பட்டம் பெற்றவுடன் கிராமப்புற மக்களுக்காகத் தான் பணியாற்ற வேண்டும் என்று மருத்துவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டதால், திண்டிவனத்தை அடுத்த நல்லாளம் கூட்டு சாலையில் மருத்துவராகப் பணியாற்றினார். கிராமப்புற மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கினார்.
பொது வாழ்வு: மருத்துவர் அன்புமணி ராமதாஸ், 1996ம் ஆண்டு முதல் பொது வாழ்வில் அவரை ஈடுபடுத்திக் கொண்டார். 1999ஆம் ஆண்டில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த அமைப்பின் சார்பில் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சுற்றுச்சூழல், நீர்வளப் பாதுகாப்பு, மனித உரிமை உரிமைப் பாதுகாப்பு தொடர்பான மாநாடுகளில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
2004 ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சுகாதாரத் துறை கேபினட் அமைச்சராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றார். இந்திய வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்தான். அத்துறையின் அமைச்சராக ஏராளமான சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 முறை நாடாளுமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2004, 2019 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவைக்கும், 2014ஆம் ஆண்டில் தருமபுரி தொகுதியில் இருந்து மக்களவைக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ம் ஆண்டு முதல் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
சாதனைகள்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் புகையிலை ஒழிப்பு, போலியோ ஒழிப்பு ஆகியவற்றுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக கீழ்க்கண்ட விருதுகளை வென்றுள்ளார்.
அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் லூதர் எல்.டெர்ரி விருது, உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறப்பு விருது, உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறந்த தலைமைப் பண்புக்கான விருது, உலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம், சென்னை ரோட்டரி சங்கத்தின் கௌரவம் தரும் விருது, இந்தியாவில் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக 2014ம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய போது, 108 அவசர ஊர்தித் திட்டம், உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கம், அண்மையில் உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதாரத் தலைவர்கள் விருது பெற்ற அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரப் பணியாளர்களை (ஆஷாக்கள்) நியமிக்கும் திட்டம், குட்காவுக்குத் தடை, பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை, திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம், போலியோ நோய் ஒழிப்பு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அமைத்தது, எய்ம்ஸுக்கு இணையான மருத்துவமனைகள் அமைத்தது, பாரம்பரிய அறிவுசார் மின்னணு நூலகம் அமைத்தது, தானாக செயலிழக்கும் சிரிஞ்ச்சை அறிமுகம் செய்தது உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி எண்ணற்ற சாதனைகளை படைத்தவர்.
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக பணியாற்றிய போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வளர்த்தவர். பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஏராளமான சிறு தடுப்பணைகளை கட்டியுள்ளார். ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாரி இருக்கிறார்.
விளையாட்டு: பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் இவரை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்று ஆசிரியர்கள் பாராட்டும் அளவுக்கு பல வகையான போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தார் அன்புமணி ராமதாஸ். ஓட்டப்பந்தயம், நீச்சல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், போன்ற தனிநபர் விளையாட்டுகளில் முதல் மாணவராகவும், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி ஆகிய குழு விளையாட்டுகளில் தமது அணியை முதல் பரிசுக்கான அணியாகவும் வெற்றி பெறச் செய்து ஏராளமான கோப்பைகளையும், பதக்கங்களையும் அன்புமணி இராமதாஸ் வென்றிருக்கிறார்.
மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் மான்ட்போர்ட் ஆங்கிலோ இந்திய பள்ளியின் சார்பில் பங்கேற்று, தமது பள்ளிக்கு வெற்றிக் கோப்பைகளையும், நற்பெயரையும் பெற்றுத் தந்திருக்கிறார். அதேநேரத்தில் பள்ளியில் அமைதியும், ஒழுக்கமும் ஒருங்கே அமைந்த மாணவர் திலகமாக அன்புமணி திகழ்ந்தார். தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் தலைவராகவும், இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவராகவும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவ்வாறு பாமக வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.