பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களின் மின்னணு பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பரிவர்த்தனையின் மூலம் மின்னணு முறையில் சேவைக் கட்டணமின்றி அனுப்பப்படும் பணத்தின் வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வரை ஐஎம்பிஎஸ் முறையில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
இன்டர்நெட் பேங்கிங், யோனோசெயலி உள்ளிட்டவை மூலம் ஐஎம்பிஎஸ் முறையில் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
அதேசமயம், வங்கிக் கிளைகள் மூலம் ஐஎம்பிஎஸ் முறையில் பணப் பரிவர்த்தனை செய்யும்போது ரூ.5 லட்சம் வரை ரூ.20 சேவைக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.
இதேபோல, என்இஎஃப்டி முறையில் ரூ.2 லட்சம் வரையிலும், ஆர்டிஜிஎஸ் முறையில் ரூ.5 லட்சம் வரையிலும் மின்னணு முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ள சேவைக் கட்டணம் கிடையாது என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.