மணிப்பூரில் நிலவிவரும் நிலைமை குறித்து ஆலோசனை நடத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தலைநகர் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டம் மாலை 3 மணிக்கு நடக்க இருக்கிறது.
முன்னதாக, மணிப்பூர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த அமித் ஷா சனிக்கிழமை அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.
மணிப்பூரில் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மே 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றார். மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டுவதற்காக நான்கு நாட்கள் தங்கியிருந்து குகி மற்றும் மைத்தி இன மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இருந்த போதிலும் அங்கு இன்னும் வன்முறை தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில், “சுமார் 50 நாட்களுக்கும் மேலாக மணிப்பூரில் நடந்துவரும், முன்னெப்போதும் இல்லாத அளவிலான வன்முறை மக்களின் வாழ்க்கையை சீரழித்து ஆயிரக்கணக்கானோரை அவர்களின் வேர்களை இழக்கச் செய்து தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைதியின் பாதையை நோக்கிய தற்போதைய நகர்வு, நமது குழந்தைகளின் மரபுரிமையான எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்.
“மணிப்பூரில் மரணங்கள் மற்றும் பேரழிவு ஏற்பட்டு 50 நாட்கள் கடந்த பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது மிகவும் தாமதமான ஒன்று. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மணிப்பூர் மக்களிடம் பேசிய பின்னர் தான் மத்திய அரசு விழித்திருக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளாதது, அவரின் கோழைத்தனத்தையும், அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள விரும்பாததையும் உணர்த்துகிறது.
இதற்கு முன் உள்துறை அமைச்சரே நேராக சென்று அங்குள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அமைதி ஏற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் நிலைமை அதற்குப் பின்னர் மிகவும் மோசமடைந்தது. அவரது தலைமையில் எப்படி நாம் அமைதியை எதிர்பார்க்க முடியுமா?” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வியாழக்கிழமை விமர்சித்திருந்தார்.
பின்னணி: மணிப்பூரில் மைத்தி சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3-ம் தேதி குகி பழங்குடியினர் அமைதிப் பேரணி நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும்மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இணைய சேவைகள் தடைசெய்யப்பட்டன. மாநிலத்தில் முழுமையாக இணைய சேவை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.