சென்னை : தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், “இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று 200க அதிகரித்துள்ளது. சென்னையில் 100 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிஏ4, பிஏ5 வகை தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது; பிஏ4 7 பேருக்கும், பிஏ5 11 பேருக்கும் பரவியுள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் மூலம் புதிய வகை கொரோனா பரவும் ஆபத்து உள்ளது. இந்த சூழலில் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாளை மறுதினம் நடைபெறும் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை ராணிப்பேட்டை, மதுரை, நாமக்கல், தேனி மாவட்டங்களில் குறைவாக உள்ளது. தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 2.1 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை,’என்றார்.