மக்களவைத் தேர்தலில் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் (ஐயுஎம்எல்) 75-வது ஆண்டு பவள விழா மற்றும் அகில இந்திய மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, வாலாஜா பள்ளி வாசலில் 75 முஸ்லிம்களுக்கு இலவசத் திருமணம், ராஜாஜி ஹாலில் உறுதிமொழி ஏற்பு மற்றும் தியாகிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாலையில் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், பவள விழா மாநாடு நடைபெற்றது. ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர்மொய்தீன் தலைமை வகித்தார்.
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், ஐயுஎம்எல் மாநிலப் பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், கேரள மாநிலத் தலைவர் செய்யது சாதிக்அலி சிஹாப் தங்ஙள், தேசியப் பொதுச் செயலாளரும், கேரள மாநில எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி, தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முகமதுபஷீர், துணைத் தலைவர் எம்.பி.அப்துல்சமது ஸமதானி, பொருளாளர் பி.வி.அப்துல் வஹாப், மாநிலப் பொருளாளர் ஷாஜகான், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான், மாநில துணைத் தலைவர் வி.நவாஸ்கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டில், சிறுபான்மை மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுயர பேனா சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது: பவள விழாவையொட்டி மாநில தலைநகரங்களில் விழா நடத்தப்பட்டு, இறுதியாக டெல்லியில் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். அந்த மாநாட்டில் முதல்வர் பங்கேற்றுப் பேச வேண்டும். திராவிட மாடல் ஆட்சியை டெல்லியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நிறுவ வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அதற்கான முயற்சியை எடுத்துள்ளோம். சிறுபான்மை மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாநில முதல்வராக மட்டுமின்றி, பிரதமராகவும் ஸ்டாலின் வர வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற நாங்கள் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பேராசிரியர் காதர் மொய்தீன் டெல்லி மாநாட்டுக்கு அழைத்துள்ளார். நிச்சயம் பங்கேற்பேன். மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, சாத்தியமானவை நிறைவேற்றப்படும்.
நீண்டகாலமாக சிறையில் உள்ள முஸ்லிம்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக குழு அமைக்கப்பட்டு, பரிந்துரை பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான கோப்பு, விரைவில் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். திராவிட மாடல் ஆட்சியின் சமூக விழுமியங்கள் நாடு முழுவதும் பரவ வேண்டும்.
இந்தியாவைக் காப்பாற்றும் ஆற்றல் சமூக நீதி, சகோதரத்துவம், சமதர்மத்துக்குத்தான் உண்டு. ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு என ஒற்றைத்தன்மையாக இந்தியாவை மாற்ற நினைப்பவர்கள், சமூகநீதிக்கு எதிரானவர்கள், சமதர்மத்தை ஏற்காதவர்கள். ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்துக்குக்கூட ஒப்புதல் தராமல், நான்கு மாதங்களுக்குப் பிறகு, சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உரிமையில்லை என்கிறார் ஆளுநர்.
இந்த உரிமையில்லாத மாநிலத்துக்குத்தான் அவர் ஆளுநராக இருக்கிறாரா? இப்படித்தான் ஆளுநர் செயல்படுவதா? இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2024 மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளது. இந்த தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம். திராவிட மாடல் ஆட்சியின் தத்துவங்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்வோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.