பொள்ளாச்சி அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில் யானை, சிறுத்தை, புள்ளி மான், வரையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து ஆழியார் அணையை நோக்கி வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டம் ஒன்று ஆழியார் அணையை ஒட்டியுள்ள பகுதியில் முகாமிட்டுள்ளது. மாலை நேரங்களில் ஆழியாறு அணை கரையை ஒட்டி யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானை கூட்டத்தை காண வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து குட்டியுடன் இருக்கும் யானைகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இருப்பினும் யானை கூட்டம் இருக்கும் பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக நேரம் நிற்கக் கூடாது என்றும், பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.