‘ராட்சசன்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க அக்‌ஷய் குமார் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்தது. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. ‘ராட்சசன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

தற்போது ரஞ்சித் திவாரி இயக்கத்தில் ‘ராட்சசன்’ இந்தி ரீமேக் தயாராகவுள்ளது. இதில் நாயகனாக அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ளார். இருவருமே இணைந்து ‘பெல் பாட்டம்’ படத்தில் பணிபுரிந்துள்ளனர். தற்போது இதே கூட்டணி ‘ராட்சசன்’ இந்தி ரீமேக்கிலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் நாயகியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டால் அக்‌ஷய் குமார் – ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடிக்கும் முதல் படமாக ‘ராட்சசன்’ இந்தி ரீமேக் அமையும் என்பது நினைவுகூரத்தக்கது.