சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம், இந்தப் படத்தை நேரடியாக டிஜிட்டலில் வெளியிட ஆர்வம் காட்டியது. ஆனால், தொலைக்காட்சி உரிமம் விற்பனையில் ஏற்பட்ட சிக்கலால் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.
இறுதியாக, கரோனா அச்சுறுத்தல் குறைந்து திரையரங்குகள் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் திரையரங்க வெளியீட்டுக்கு முயற்சி செய்தது. ஆனால், வாரம் ஒரு படம் வெளியீடு என்ற ரீதியில் வரிசையாகப் படங்கள் இருக்கின்றன.
இதனை முன்வைத்து ஓடிடி வெளியீடுதான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்துவிட்டது ‘டாக்டர்’ படக்குழு. இதன் டிஜிட்டல் உரிமையை ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ‘டாக்டர்’ வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.