சூரி மூலமாகத்தான் நான் சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்ற நிலை எனக்கில்லை என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காடன்’. கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் படத்தின் வெளியீடு, ஓராண்டுக்குப் பிறகு மார்ச் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனம்.
‘காடன்’ படத்தை விளம்பரப்படுத்த விஷ்ணு விஷால் இன்று (மார்ச் 22) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள், சூரியுடனான பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது:
“இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து விரிவாகப் பதிலளிக்க இயலாது. இருப்பினும் எனக்கோ என்னுடைய தந்தைக்கோ சூரியின் நிலம் தொடர்பான பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தான் உண்மை. இந்த விவகாரத்தில் நான் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன்.
இது தொடர்பாக என்னால் அதிகமான விவரங்களைத் தெளிவாகத் தர இயலும். சூரி கொடுத்த புகாரில் உள்ள ஒவ்வொரு விஷயத்துக்கும் என்னால் விளக்கம் கொடுக்க இயலும்.
அதன்பிறகு அவருடைய இருண்ட பக்கங்களை விளக்க வேண்டியதாக இருக்கும். இதன் காரணமாக அவருக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.
சில ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தந்தையின் காலில் விழுந்து வணங்கி, ‘நீங்கள் தான் என்னுடைய கடவுள்’ என்று சொன்ன ஒருவர், தற்போது என் மீதும், என்னுடைய தந்தை மீதும் புகார் அளித்திருக்கிறார்.
கரோனா காலகட்டத்தில் என்னுடைய தந்தையை வெளியே அனுப்பாமல் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தேன். ஆனால் சூரியின் புகாரின் காரணமாக அவர் வழக்கறிஞர்களைச் சந்திப்பதற்கும், நீதிமன்றத்திற்கும் அலைய வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கி விட்டார். இதை ஒரு மகனாகப் பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும்.
ஒன்று மட்டும் உறுதியாகக் கூறுகிறேன். சூரி மூலமாகத்தான் நான் சம்பாதித்துச் சாப்பிட வேண்டும் என்ற நிலை எனக்கில்லை. என்னுடைய தந்தை கூலி வேலை செய்து, மாடு மேய்த்து, கடினமாக உழைத்து, படித்து அதன் பிறகு போலீஸ் அதிகாரியாக உயர்ந்திருக்கிறார்.
சூரியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். அதனை முழுமையாக நம்பி எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். உண்மை ஒருநாள் தெரிய வரும்பொழுது அவர் எங்களைப் பற்றி உணர்ந்து கொள்வார்”
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்தார்.