நடிப்பு, நடனம், ஆக்‌ஷன் என பக்கா கமர்ஷியல் ஹீரோவாக வலம் வரும் விஜய்யின், வசீகர குரலுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய்யை பாடகராக அறிமுகம் செய்தது இசையமைப்பாளர் தேவா தான். 1994-ல் வெளிவந்த ரசிகன் படத்தில் இடம்பெற்ற ‘பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி’ என்ற பாடலை பாடகி சித்ராவுடன் இணைந்து பாடியிருந்தார் விஜய்.
இதையடுத்து விஷ்ணு, தேவா, காலமெல்லாம் காத்திருப்பேன், மாண்புமிகு மாணவன், ஒன்ஸ்மோர், நெஞ்சினிலே என தேவா இசையமைத்த படங்களில் தொடர்ந்து பாடிவந்த விஜய்க்கு, காதலுக்கு மரியாதை படத்தில் இடம்பெறும் ‘ஓ பேபி பேபி’ பாடலை பாட வாய்ப்பளித்தார் இளையராஜா. அப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.
அதுவரை தன் படங்களில் மட்டும் பாடி வந்த விஜய், பின்னர் மற்ற நடிகர்களின் படங்களிலும் பாடினார். ரகுவரன் நடித்த ‘துள்ளி திரிந்த காலம்’ படத்தில் ஜெயந்தின் இசையில் ‘டக் டக் டக் டக்’ என்ற பாடலையும், யுவனின் இசையில் வேலை படத்திலும் பாடிய விஜய், சூர்யா நடிப்பில் வெளியான பெரியண்ணா படத்திற்காக பாடிய  2 பாடல்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

விஜய்

இதையடுத்து தமிழன் படத்தில் டி.இமானின் இசையில் ‘உள்ளத்தை கிள்ளாதே’ என்ற பாடலை பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து பாடினார் விஜய். பகவதி படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘கொக்ககோலா பிரவுன் கலருடா’ என்ற பாடலையும், தேவி ஸ்ரீபிரசாத் இசையில் சச்சின் படத்தில் இடம்பெறும், ‘வாடி வாடி வாடி கைபடாத சிடி’, பத்ரி படத்தில் இடம்பெறும் ‘ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு’ ஆகிய பாடல்களையும் பாடினார். 
2005-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை எந்த பாடத்திலும் பாடாமல் இருந்த விஜய். 2012-ம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்திற்காக ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ‘கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன்’ பாடல் மூலம் பாடகராக ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றது. 
இதைத்தொடர்ந்து தலைவா, ஜில்லா, கத்தி, புலி, தெறி, பைரவா ஆகிய படங்களில் தலா ஒரு பாடலை பாடியிருந்த விஜய், மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய படங்களில் எந்த பாட்டும் பாடவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட வேண்டும் என்ற அவரது நீண்டநாள் ஆசை பிகில் படத்தின் மூலம் நிறைவேறியது. அப்படத்திற்காக அவர் பாடிய வெறித்தனம் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. 
அண்மையில் வெளியான மாஸ்டர் படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடலுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்திலும் நடிகர் விஜய் பாட்டுப்பாட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.