இங்கிலாந்தில் கொரோனா இறப்பு விகிதம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய ஊரடங்கு அடுக்கு முறை கட்டுப்பாடுகள் பாதிப்பை குறைக்க போதுமானதாக இல்லை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


கொரோனா பரவல் இங்கிலாந்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. லண்டனில் பெரிய  மருத்துவமனைகள் படுக்கை பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


 மேலும், கொரோனா பெருந்தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது என தெரிய வந்துள்ளது. நான்காவது நாளாக, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளது.


இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 2,542,065 என தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 28 நாட்களில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 74,125 என தெரிய வந்துள்ளது. இந்த நிலையிலேயே தற்போதைய ஊரடங்கு அடுக்கு முறை கட்டுப்பாடுகளைவிட கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என விஞ்ஞானிகள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.


வடகிழக்கு லண்டனில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் கொரோனா நோயாளிகளின் அதிகரிக்கும் எண்ணிக்கையால் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


 சில மருத்துவமனைகள் போதிய ஆக்ஸிஜன் கையிருப்பு இல்லாமல் தத்தளிப்பதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான செவிலியர்கள் எண்ணிக்கை இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை ராயல் லண்டன் மருத்துவமனை வளாகத்தில் மொத்தமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையாக காணப்பட்டதன் பின்னரே, இந்த பகீர் கிளப்பும் தகவலும் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி லண்டனில் பல மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் தருவாயில் உள்ளதாகவும், மருத்துவமனை நிர்வாகம் அதை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மருத்துவர்கள் முன்வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.


லண்டனின் மிகவும் பிரபலமான மருத்துவமனை ஒன்று, அவசர சிகிச்சை கட்டாயம் தேவைப்படும் நோயாளிகளுக்கு தங்களால் உரிய சேவையை வழங்க முடியாத அபாயகரமான நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது.