ஒற்றை ஆண் யானைகளே உணவுக்காக வனத்தை விட்டு அதிக அளவில் வெளியேறுவது கோவை வனத்துறையினரின் 8 மாத காலத் தொடர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோவை வனக்கோட்டத்தில் தினந்தோறும் யானைகள் வனத்தை விட்டு வெளியேறி, பயிர்களை உட்கொள்வது, யானை – மனித மோதல் சம்பவம் நடப்பது தொடர்பாக, வனத்துறையின் எல்லையோர இரவு ரோந்துக் குழுவினர் 2020 நவம்பர் முதல் கடந்த ஜூன் வரையிலான 8 மாதங்கள் தொடர்ந்து தகவல் சேகரித்து வந்தனர்.

எந்தெந்த மாதங்களில் யானைகள் அதிக அளவு வனத்தை விட்டு வெளியேறுகின்றன, எந்தெந்த யானைகள் பயிர்களை அதிகம் சேதப்படுத்துகின்றன என்பது குறித்த அந்த ஆய்வு அறிக்கையை கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

“கடந்த 8 மாதங்களில் ஒற்றை ஆண் யானைகள் 832 முறையும், ஆண் யானைக் கூட்டம் 177 முறையும், பெண் யானைக் கூட்டம் 206 முறையும், குட்டிகளுடன் உள்ள பெண் யானைகள் 82 முறையும், பெண் யானைகள் தனியாக 6 முறையும் வனத்தை விட்டு வெளியேறியுள்ளன.

நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பயிர்கள் செழிப்பாகவும், நீர்நிலைகள் நிரம்பி உள்ளபோதும் யானைகள் அதிக முறை வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்கு உணவு தேடி வந்துள்ளன. 3 விதமான ஆண் யானைகள் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலத்துக்கு வருகின்றன.

கூட்டத்திலிருந்து சண்டையிட்டுக்கொண்டு தனித்து வந்து தனக்குத் தேவையான உணவுக்காகப் பயிர்களை நோக்கி வரும் யானைகள், இடப்பெயர்வின்போது அருகில் பயிர்கள் இருந்தால் வாய்ப்பைப் பயன்படுத்தி வரும் யானைகள், உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ, குட்டிகளுடன் இருக்கும் பெண் யானைகளால் வெகுதூரம் உணவுக்காகச் செல்ல முடியாதபோது, உடனிருக்கும் ஆண் யானைகள் தனது குடும்பத்துக்காகப் பயிர்களை நோக்கி இரவு நேரங்களில் வருவது கண்டறியப்பட்டுள்ளது.

பெண் யானைகள் வெளியேறக் காரணம்?

வடகிழக்குப் பருவமழைக்குப் பின், தென்மேற்குப் பருவமழை காலத்துக்கு முன் கூட்டமாகப் பெண் யானைகள் கூட்டம் வனத்தை விட்டு வெளியேறுகின்றன. குட்டிகள் இருப்பதால் பாலூட்ட வேண்டியுள்ளதால், நீண்ட தொலைவு பயணிக்க முடியாமலும், ஒரே இடத்தில் அதிக அளவு உணவு கிடைக்கும் என்பதாலும், வேறு வழியின்றி கட்டாயமாகப் பயிர்களை நோக்கிக் குட்டிகளுடன் உள்ள பெண் யானைகள் வருகின்றன.

ஒற்றை பெண் யானை தனியாகப் பயணிப்பதில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டு தன்னுடைய கூட்டத்தால் விரட்டப்பட்டால் மட்டுமே அவை வெளியே வருகின்றன”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை கோவை மண்டலக் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் தலைமையில், மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ், உதவி வனப் பாதுகாவலர்கள் செந்தில்குமார், தினேஷ், உயிரியலாளர் நவீன், ஆனைமலை புலிகள் காப்பக உயிரியலாளர் பீட்டர் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர்.