துணிவு’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அணுகினார்கள்” என நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார்.

‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் ஷ்யாம் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர், “20 வருடங்களுக்கு முன்பு ‘குஷி’ படத்தில் அவருடன் ஒரே ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருந்தேன். அதன்பிறகு இப்போது ‘வாரிசு’ படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமாக அவரது சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். விஜய்யிடம் பேசும்போது, ‘எப்படி அண்ணா நாளுக்கு நாள் இளமை ஆகிக்கொண்டே போகிறீர்கள்?, இதற்காக என்ன உணவு கட்டுப்பாடு மேற்கொள்கிறீர்கள் என கேட்டால்?’, “தினசரி பூரி, பொங்கல் தான் சாப்பிடுகிறேன், எப்பவாவது உடற்பயிற்சி செய்கிறேன்” என சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.

படப்பிடிப்பு முடிவடைந்ததும் எங்களை எல்லாம் அவரது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்தினார். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான உணவு அயிட்டங்களை அந்த விருந்தில் சேர்த்து இன்னும் ஆச்சர்யப்படுத்தினார். அப்போது தன் வீட்டில் உள்ள பணியாளர்களை எல்லாம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தன் கையாலேயே அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினார்” என்றார்.

தொடர்ந்து அஜித்தின் ‘துணிவு’ படம் குறித்து பகிர்ந்துகொண்ட அவர், “விஜய்யிடம் ‘துணிவு’ படமும் வாரிசுடன் தான் வருகிறது என்று சொன்னபோது ‘ஹை ஜாலி 2 படமும் வரட்டும்.. பார்ப்போம்’ என்று அதையும் பாசிட்டிவாகத்தான் அணுகினார். இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.. துணிவு படத்திலும் வில்லனாக நடிக்க முதலில் எனக்குத்தான் அழைப்பு வந்தது. ஆனால் இயக்குநர் வினோத் கேட்ட தேதிகளும் வாரிசு படத்திற்கான எனது தேதிகளும் ஒரேசமயத்தில் இருந்ததால் என்னால் ‘துணிவு’ படத்தில் நடிக்க முடியாமல் போனது.

அதேசமயம் அந்தக் கதாபாத்திரத்திற்காக என்னை யோசித்ததற்காக இயக்குநர் வினோத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் நடித்து வருகிறேன். அதைத்தொடர்ந்து ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு படமும் தயாராக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.