வெறும் 20 நிமிடங்கள் மட்டும் கதை கேட்டு தான் ஒப்புக்கொண்ட ஒரே படம் ‘சுல்தான்’ தான் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு, இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புதன்கிழமை காலை சென்னையில் நடந்தது.
இதில் நடிகர் கார்த்தி பேசுகையில், “நான் 20 நிமிடங்கள் கதை கேட்டு ஒப்புக்கொண்ட ஒரே படம் சுல்தான்தான். எந்தப் படமாக இருந்தாலும் முழு திரைக்கதையைக் கொடுங்கள் என்று கேட்பேன். அதனாலேயே பலர் ஓடி விடுவார்கள்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பெரிய விஷயங்களாக யோசிக்கிறார். அதுவே இப்போது அரிதாக இருக்கிறது. பாக்கியராஜ் மிகவும் பொறுமைசாலியும் கூட. இரண்டு வருடங்கள் இந்தத் திரைக்கதைக்காக வேலை செய்திருக்கிறார். படம் வெற்றி பெற்றால் எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும். அப்படி ஒரு கதை” என்று பாராட்டினார்.
ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்க வெளியீட்டுக்கு இந்தப் படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் விநியோக உரிமையை யாருக்கும் கொடுக்காமல், தமிழகத்தில் நேரடியாக வெளியிட ட்ரீம் வாரியர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.