ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 2 விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினர் ஜன. 22-ம் தேதி சிறைப்பிடித்தனர். மேலும், அந்த படகுகளில் இருந்த ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான பாபு (38),ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (34), நிஷாந்தன் (34), முருகேசன் ஆகிய 6 மீனவர்களைக் கைது செய்தனர்.

அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், 6 மீனவர்களும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற நிபந்தனையின் கீழ், அவர்களை விடுதலை செய்தார்.

ஆனால், சிறைப்பிடிக்கப்பட்ட படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை நாட்டுடைமையாக்கி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகஅதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.