இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை கட்டுக்குள் வந்து சில மாதங்கள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு விகிதம் மெல்லமாக அதிகரித்துவருகிறது. தற்போது தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதியாகும் விகிதம் 10% மேல் உள்ளது. தொற்று உறுதியாகும் விகிதம் 10% மேல் இருந்தாலோ அல்லது மருத்துவமனைகளில் 40% க்கும் மேல் படுக்கைகள் நிரம்பினாலோ நோய் பரவல் அதிகமாக இருப்பதாக கருதி அதை கட்டுப்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது.
மாநிலத்தின் ஒட்டுமொத்த சராசரி தொற்று உறுதியாகும் விகிதம் 8.7% என 10%க்கும் கீழ் உள்ளது. எனினும் சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் தொற்று உறுதியாகும் விகிதம் 10%க்கும் மேல் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஜூன் 15ம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் கூட தொற்று உறுதிதாகும் விகிதம் 10% தாண்டவில்லை.
ஜூலை 5ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் செங்கல்பட்டில் 12.6 சதவீதமும், சென்னையில் 12.4 சதவீதமும், கோவை 11.8 சதவீதமும், ராணிப்பேட்டை 11.7 சதவீதமும், திருவள்ளூர் 12.4 சதவீதமும், திருநெல்வேலி 12.3 சதவீதமும், விருதுநகர் 11.2 சதவீதமும்
தொற்று உறுதியாகும் விகிதம் பதிவாகியுள்ளது.
தொற்று உறுதியாகும் விகிதம் அதிகரித்திருப்பது தொற்று வேகமாக பரவி வருகிறது என்பதை குறிக்கிறது. இதனால் அமைதியாக நான்காம் அலை தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது என சிறப்பு மருத்துவர் ( internal medicine) ரோஸ் ரேச்சல் தெரிவிக்கிறார்.
தற்போது தொற்று அதிகரித்து வருவதற்கு காரணம் புதிய ஒமைக்ரான் வகை BA 2.75, BA5 கொரோனா என்று தொற்று நோய் நிபுணர் சுப்ரமணியன் சுவாமிநாதன் கூறுகிறார். ஏற்கனவே பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் ஜூன் மாதம் செய்யப்பட்ட மரபணு பகுப்பாய்வில் தமிழகத்தில் BA5 வகை கொரோனா தான் வேகமாக பரவுகிறது என தெரிவித்திருந்தது.
அதிகரித்து வரும் தொற்று குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கேட்ட போது, ’தொற்று உறுதியாகும் விகிதம் அதிகரித்தாலும் மருத்துவமனை சேர்க்கைகள் 40% எட்டவில்லை என்பதால் பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.