தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவல் குறையத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை நிபுணர்கள், கடந்த நவம்பர் 26 ஆம் தேதி ஒமைக்ரான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.
அதன்பிறகு கரோனா தொற்று எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. இப்போது அது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் அலை உச்சத்தைத் தொட்டு சரிவதாகக் கருதுகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 16 ஆம் தேதியன்று 27,000 ஆக இருந்த ஒமைக்ரான் தொற்று டிசம்பர் 21ல் 15,424 ஆகக் குறைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று உறுதியான மையப்புள்ளியாகக் கருதப்பட்ட காடெங் மாகாணம், ஜோஹனஸ்பெர்க், ப்ரிடோரியா ஆகிய பகுதிகளில் அன்றாட பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.
ஒமைக்ரான் எண்ணிக்கை குறைந்தது உறித்து தென் ஆப்பிரிக்காவின் விட்வாட்ஸ்ரேண்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி, தொற்று நோய்கள் ஆராய்ச்சித் துறை மூத்த ஆராய்ச்சியாளர் மார்டா நூன்ஸ் ஏபி செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “கவ்டென் மாகாணத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. இந்தப் பகுதிதான் சமீப காலமாக தொற்றின் மையப்புள்ளியாக இருந்தது. இந்நிலையில் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இது உண்மையில் ஒரு குறுகிய அலை. இதில் நல்ல செய்தி என்னவென்றால் ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதியாகும் நிலையோ மரணமோ அதிகமாக ஏற்படவில்லை. தொற்று நோய்ப் பரவல் வரலாற்றில் எப்போது நோய்ப் பரவல் உச்சம் தொடுகிறதோ அதிலிருந்து அது மீண்டும் படுவேகத்தில் குறைவது இயல்பே” என்றார்.
இதுவரை ஒமைக்ரான் வைரஸ் 106 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன், டென்மார்க், போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய நாடுகளில் அன்றாட தொற்று எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவுக்கு உள்ளது.
இதற்கிடையில், நேற்று வெளியான தென் ஆப்பிரிக்க தேசிய தொற்று நோய்கள் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையில், “மற்ற உருமாறிய கரோனா வைரஸ்களை ஒப்பிடும் போது ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதியாகும் ஆபத்து 80% குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4வது அலையில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படும் தென் ஆப்பிரிக்கர்களில் 80% பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாது. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலுக்கு வரும் நோயாளிகளுக்கு மற்ற திரிபுகளால் ஏற்படும் ஆபத்திற்கு இணையான ஆபத்தும், அச்சுறுத்தலும் இருக்கும்.
முதன்முதலாக தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளால் கடந்த நவம்பர் 25 ஆம் தேதியன்று உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. அதற்கு முன்னதாக கடந்த ஏப்ரலில் இருந்து நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட டெல்டா பாதிப்புகளை ஒப்பிடும்போது இப்போதுள்ள ஒமைக்ரான் பாதிப்பால் ஏற்படும் நோய்த் தீவிரம் 70% குறைவாக இருக்கிறது.
ஒமைக்ரான் கண்டறியப்பட்டதில் இருந்து பரவல் மிக மிக அதிகமாக இருக்கிறது. ஒமைக்ரான் தொற்றாளர்கள் அதிகளவில் வைரஸ் சுமையை சுமக்கின்றனர். அதனாலேயே பரவும் தன்மையும் அதிகமாக உள்ளது” என்று தெரிவித்திருந்தது.
தற்போது அங்கு அன்றாட தொற்று எண்ணிக்கை குறைவது உலக நாடுகள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தும் தகவலாக உள்ளது.