ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் அணி அபார வெற்றியை பதிவு செய்து.

இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர் ரஞ்சி கோப்பை. இந்த தொடரின் 2025-26 ஆம் ஆண்டிற்கான சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கொல்கத்தாவிலுள்ள கல்யாணி நகரில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பெங்கால் அணியில் சுதிப் குமார் கராமி சதம் விளாசி அசத்தினார். மேற்கொண்டு அவர் 146 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் 328 ரன்களை சேர்த்த கையோடு ஆல் அவுட்டானது. ஜம்மு காஷ்மீர் தரப்பில் அதிகபட்சமாக ஆகிப் நபி தார் 5 விக்கெட்டுகளையும், சுனில் குமார் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜம்மு கஷ்மீர் அணியில் அதிகபட்சமாக அப்துல் சமத் 82 ரன்களையும், கேப்டன் பராஸ் தோக்ரா 58 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் அணி 302 ரன்களில் ஆல் அவுட்டானது. பெங்கால் அணி தரப்பில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து 26 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பெங்கால் அணி பேட்டர்கல் ஜம்மு காஷ்மீரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். அதிலும் அந்த அணியில் அதிகபட்சமாக ஷபாஸ் அஹ்மத் 24 ரன்களை எடுத்ததை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி வெறும் 99 ரன்களில் ஆல் அவுட்டானது.
ஜம்மு காஷ்மீர் அணி தரப்பில் அகிப் நபி தர் மற்றும் சுனில் குமார் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் அணிக்கு 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஜம்மு அணியில் ஷுபம் கஜுரியா ஒரு ரன்னிலும், யவர் ஹசன் 6 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார்.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜம்மு – காஷ்மீர் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் நேற்று(பிப்.18) தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஜம்மு அணி தரப்பில் ஷுபம் 23 ரன்களுடனும், வன்ஷ் சர்மா 9 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஷுபம் 27 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பராஸ் தோக்ராவும் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இருப்பினும் இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வன்ஷ் சர்மா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களையும், அப்துல் சமாத் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் அணி 34.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் ஜம்மு காஷ்மீர் அணி ரஞ்சி கோப்பை தொடர் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த போட்டியில் தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் அணியின் வெற்றிக்கு உதவிய ஆகிப் நபி தார் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதனையடுத்து பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்த்து, ஜம்மு காஷ்மீர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
