அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் கூட்டுத் தாக்குதலால் ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த சூழலில் தான், வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழலில் இன்று, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியிருந்த ஈரான் ராணுவம், நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா. இல்லையா எனத் தெரியவில்லை எனத் தெரிவித்திருக்கிறது. அதேபோல, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டுத் தாக்குதலில், ஈரானில் இதுவரை 555 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஈரானிய ரெட் கிரசண்ட் (IRCS) அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 4 வாரங்களுக்கு இந்தப் போர் நீடிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் போர் நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் கைகோர்ப்பதாக தெரிவித்துள்ளன.
இந்த நிலையில்தான், ஈரானுக்கு வெளிப்படையான ஆதரவை சீனா தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, சீனா வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ உடன் நடத்திய தொலைபேசி உரையாடலில், சீனா ஈரானுடனான தனது பாரம்பரிய நட்பை மதிக்கிறது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய கண்ணியத்தைப் பாதுகாப்பதில் சீனா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என வாங் யீ தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் உடனடி அமைதி வேண்டுமெனவும் உடனடி தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
