பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து வங்கதேசம் வரலாற்று சாதனை

பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து வங்கதேசம் வரலாற்று சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

சில்ஹெட்: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மே 16ஆம் தேதி சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி லிட்டன் தாஸின் அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 16 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 126 ரன்களை சேர்த்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் குர்ராம் ஷஷாத் 4 விக்கெட்டுகளையும், முகமது அப்பாஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 68 ரன்களையும், சஜித் கான் 38 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக அந்த அணி 232 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் நஹித் ரானா மற்றும் தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணியில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 137 ரன்களையும், லிட்டன் தாஸ் 69 ரன்களையும் விளாசினார். இதன் மூலம் வங்கதேச அணி 390 ரன்களை குவித்து ஆல் அவுட்டானதுடன், பாகிஸ்தான் அணிக்கு 437 ரன்களை இலக்காகவும் நிர்ணயித்தது. பாகிஸ்தான் தரப்பில் குர்ராம் ஷஷாத் 4 விக்கெட்டுகளையும், சஜித் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் ஷான் மசூத், சல்மான் ஆகா தலா 71 ரன்களையும், முகமது ரிஸ்வான் 94 ரன்களையும் சேர்த்து போராடிய நிலையிலும் அந்த அணியால் 358 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதன் மூலம் வங்கதேச அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. முன்னதாக 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் வைத்து 2-0 என்ற கணக்கில் அந்நாட்டை வீழ்த்திய வங்கதேச அணி, தற்போது 2026 டெஸ்ட் தொடரிலும் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

மேற்கொண்டு இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதமும் விளாசிய லிட்டன் தான் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேசமயம் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் தொடர் நாயகன் விருதை வென்றார்.