அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலில் 555 பேர் பலி: இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்?

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலில் 555 பேர் பலி: இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்?

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ரெட் கிரசண்ட் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் குடும்பத்தினர் கொல்லப்பட்டதையடுத்து ஈரான் தனது பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சவுதி அரேபியா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசிய நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானில் 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரெட் கிரசண்ட் சொசைட்டி அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் முழுவதும் இதுவரை 131 நகரங்களில் அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஈரானில் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. பன்னாட்டு அணுசக்தி முகமையகத்துக்கான ஈரானின் தூதர் ரெசா நஜாபி கூறுகையில், ஈரானின் அமைதிப்பணிக்கான மற்றும் பாதுகாப்பாக இருந்த நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலடியாக ஓமனில் எண்ணெய் கப்பல் மீது எரிபொருள் படகை மோதவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. எரிபொருள் நிரப்பிய படகை, எண்ணெய் கப்பல் மீது மோதவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் தாக்குதலின்போது 16 இந்தியர்கள் உட்பட 21 பேர் கப்பலில் பணியில் இருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலால் கப்பலின் இயந்திர அறையில் தீ மற்றும் வெடிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக இந்திய பணியாளர் ஒருவர் இறந்துள்ளார். இந்த நிலையில், இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகம் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படையான ஐஆர்ஜிசி தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் மறுத்துள்ளது.