வாஷிங்டன்: அமெரிக்கா வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா இப்போது வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
எனது உத்தரவின் பேரில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர், வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் தனியார் வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டனர்.
இதன் மூலம், அமெரிக்க வரி செலுத்துவோருக்கு எந்தச் செலவும் இன்றி, வெனிசுலாவில் உள்ள 65 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெய்களை பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்துகிறது; நமது எண்ணெய் விநியோகத்தை வெகுவாக அதிகரிக்கிறது.
எதிர்காலத்தில் அனைத்து அமெரிக்கர்களுக்கும் எரிபொருள் விலையைக் கணிசமாகக் குறைக்கிறது. அதே வேளையில், வெனிசுலாவை மிகப்பெரிய வெற்றி, செழிப்பை நோக்கிய பாதையில் தொடர்ந்து பயணிக்கவும் இது உதவுகிறது. இந்த ஒப்பந்தம் வெனிசுலா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்கனவே வளர்ந்து வரும் உறவை மேலும் வலுப்படுத்தும்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியவர்களுக்கு நன்றி; அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
