தஞ்சாவூர்: வண்டல் மண் எடுக்க, நீர்வளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள், 2.88 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளதாக கூறி, விவசாயிகள், கலெக்டர் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ரேவதி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, ஒரத்தநாடு வட்டாரத்தில் வண்டல் மண் எடுக்க, 30 யூனிட் அளவுக்கு விவசாயிகளிடம் இருந்து, நீர்வளத்துறை அதிகாரிகள், 10,000 ரூபாய், தாசில்தார் 10,000 ரூபாய் என, லஞ்சம் கேட்கின்றனர்.
இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. லஞ்சம் கொடுக்க துாண்டுகின்றனர். லஞ்சம் கொடுத்ததும் மண் அள்ள அனுமதி எனக்கூறி, தமிழ்நாடு விவசாய சங்க கூட்டியக்க மாநில து ணைத் தலைவர் சுகுமாறன் தலைமையில் விவசாயிகள், கலெக்டர் ரேவதி முன்பு, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகுமாறன் கூறுகையில், ”ஒரத்தநாடு வட்டாரத்தில், 72 இடங்களில் மண் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 40 நாட்களில், 2.88 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர். லஞ்சம் வாங்கிக்கொண்டு மண் அள்ளினாலும், அளவுக்கு மீறி அள்ளுவதாக போலீசிடம் கூறி, போலீசார் மூலம் வருவாய் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்,” என்றார்.
