வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, தவெக ஆட்சிக்கு வந்தது முதல் 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 லட்சத்து 2,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சத்து 21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு நேற்று புறப்பட்டார். இதற்காக நேற்று இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்ற முதல்வர் விஜய், அங்கிருந்து லண்டன் சென்றார்.
லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கும் முதல்வர் விஜய், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அங்கு தனது நண்பர் நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தை முதல்வர் பார்வையிட இருப்பதாகக் கூறப்படுகிறது. லண்டனில் வசிக்கும் தமிழர்களையும் சந்தித்து முதல்வர் விஜய் கலந்துரையாட உள்ளார்.
சுமார் ஒரு வாரம் வரை லண்டனில் முகாமிடும் முதலமைச்சர் விஜய்க்கு, வழக்கமான நட்சத்திர ஹோட்டல்களுக்குப் பதிலாக அமைதியான சூழலில் தங்கித் தனது அரசு ரீதியான ஆலோசனைகளையும் முதலீட்டாளர் சந்திப்புகளையும் நடத்தவே இந்த லேக் ஹவுஸ் தங்குமிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நெறிமுறை அமைப்புகளை (ASL) லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து தமிழக அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு தொழில் துறை மற்றும் நிதித் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஏற்கனவே லண்டன் சென்றடைந்து முதற்கட்ட பேச்சுவார்த்தை களுக்கான நிலப்பரப்பைத் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. லண்டனில் தங்கியிருக்கும் நாட்களின் போது, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பல்வேறு பன்னாட்டு நிறுவனத் தலைவர்களுடன் முதலமைச்சர் விஜய் தொடர் சந்திப்புகளை நடத்தவும் உள்ளதாக கூறப்படுகிறது.
வருகிற செப்டம்பர் 17ம் தேதி வரை பிரிட்டனில் தங்கும் முதலமைச்சர் விஜய், புதிய முதலீட்டு ஒப்பந்தங்களை நிறைவு செய்த பிறகே சென்னை திரும்புவார் என தெரிகிறது. நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர்த்துத் தனித்துவமான ‘லேக் ஹவுஸ்’ இல்லத்தை வாடகைக்கு எடுத்து அரசுப் பணிகளை மேற்கொள்ளும் முதலமைச்சரின் இந்த நகர்வு, அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தின் முதல்வரான பின்னர் விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
