முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு புதிய பெயர்: மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிகூட்டணி என அறிவிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு புதிய பெயர்: மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிகூட்டணி என அறிவிப்பு

இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப்.09) அறிவிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகளின் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (செப்.09) முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

பின்னர் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்பது தமிழ்நாட்டிற்கும், புதுச்சேரிக்குமானது. இந்த கூட்டணி பலமான கூட்டணியாக இருக்கும். இடைத்தேர்தலுக்கான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை (செப்.10) அறிவிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. பல வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் நேர்மையான ஆட்சி அமைந்துள்ளது” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “இதுவரை ஆதரவு கட்சிகளாக இருந்த நாங்கள் இன்று முதல் கூட்டணிக் கட்சிகளாகப் பரிணாமம் அடைந்திருக்கிறோம். முதலமைச்சர் தலைமையில் கூடிய கலந்தாய்வுக் கூட்டத்தில், ஒருமனதாகக் கூட்டணியின் பெயர் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மையும், சமூக நீதியும் இந்த கூட்டணியின் முதன்மையான குறிக்கோள்கள், கோட்பாடுகள். ஆகவே, இந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மதச்சார்பின்மையை தமிழ்நாட்டில் மட்டுமின்றி அகில இந்திய அளவில் நாம் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். மதவாத சக்திகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு களத்தில் நாங்கள் கைக்கோர்த்திருக்கிறோம். தேர்தலுக்காக மட்டுமில்லை; இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நாங்கள் சில தேர்தல்களைச் சந்திக்கவிருக்கிறோம்.

தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; அரசியலமைப்பு சட்டம் முன்மொழியும் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் தொலைநோக்கு பார்வையோடு இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், “இந்துத்துவ பாசிச சக்திகளுக்கு தமிழ்நாட்டிலேயே இன்று வரை இடமில்லை; நாளையும் இடமில்லை. இங்கே பிரவேசிக்க அனுமதிக்க மாட்டோம் என்ற உணர்வோடு கரம் கோர்த்திருக்கின்ற நாங்கள், இந்த கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயரை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளோம். அந்த பெயரிலேயே எங்களுடைய இலக்குகள் உள்ளது.

ஒன்று மதச்சார்பின்மை, மற்றொருன்று சமூகநீதி. இந்த இரண்டையும் இலக்காக வைத்து கூட்டணி இயங்கும்; தவெக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைப்பாகச் செயல்படுவதற்கான கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்துவது என்றும், இரண்டு தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெக எடுக்கும் முடிவின்படி அந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும், அதில் தோழமைக் கட்சிகள் பங்கெடுக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு தொகுதிகளிலும் முதலமைச்சர் தோழமைக் கட்சிகளுடன் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை தவெக ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இந்த கூட்டணி வெற்றிகரமாக செயல்படும். தேர்தல் களங்களில் வெற்றி வாகைச் சூடும் என்ற நம்பிக்கையுடனும், உணர்வுடனும் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் கூறுகையில், “தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கூட்டணி அமைச்சரவை என்று உருவாக்கப்பட்டதே இல்லை. முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் தலைமையில் கூட்டணி அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய வரலாறு இன்று பிறந்திருக்கிறது. இந்த கூட்டணி, உலகமே பாராட்டக் கூடிய வரலாற்றை நிச்சயமாகப் படைக்கும். வரும் தேர்தல்களில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வெற்றி மேல் வெற்றி பெறும்” என்று கூறினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகையில், “தமிழ்நாட்டில் தேர்தலுக்கு அப்பாற்பட்டு கொள்கை கூட்டணி உருவாகியுள்ளது. மதச்சார்பின்மையும், சமூக நீதியும் எங்கிருக்கிறதோ அங்கு தான் வெற்றி இருக்கும். இந்த இரண்டு கொள்கையும் இருக்கின்ற இடத்தில் எப்போதும் வெற்றி இருக்கும். அந்த வெற்றி மக்களுக்கானதாக இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருக்கிறார்கள், ஆட்சிக்கு ஆதரவு இருக்கு என்று. கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையிலும், அரசியலிலும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும், எங்களது கூட்டணிக்கும் உறுதியான மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. மதச்சார்பின்மையும், சமூகநீதியும் எங்கிருக்கிறதோ அங்கு அவர்களுடைய மனசு கண்டிப்பாக இருக்கும்” என்றார்.