ராமேஸ்வரம் கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத அமாவாசை, சர்வ அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பூஜை செய்வது வழக்கம்.
அதன்படி ஆவணி மாத சர்வ அமாவாசையையொட்டி (செப்.10) அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

முன்னதாக அவர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடியதை தொடர்ந்து கடற்கரையில் அமர்ந்து உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர். பின்னர் கோவிலுக்கு சென்று ராமநாத சுவாமி, அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர்.
