புதுடெல்லியில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்க உள்ளார்.
மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் நாளை மறுத்தினம் தொடங்குகின்றன. இதில் பிரிக்ஸ் அமைப்பின் 11 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரிக்ஸ் கூட்டணி நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பு நாடுகளின் தலைவர்கள் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் மாநாட்டில் பலதரப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி மற்றும் உலகளாவிய நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 நாடுகள் முழு உறுப்பினர்களாக உள்ளன. சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
பிரிக்ஸ் கூட்டணி மற்றும் அழைப்பு நாடுகளின் தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரகுல், கியூபா அதிபர் மிகுவல் டியாஸ்-கனெல், நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபு உள்ளிட்டோர் இதில் அடங்குவர். ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸும் பங்கேற்க உள்ளார்.
மாநாட்டுக்கு முன்னதாக நாளை டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதில் சீனா, ரஷ்யா, பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். வேளாண்மை, வர்த்தகம், முதலீடு, விநியோகச் சங்கிலி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு சீனாவிலிருந்து ஏராளமான தொழிலதிபர்கள் இந்தியா வருகை தர உள்ளனர். சீன தேசிய பெட்ரோலிய கழகத் தலைவர் ஹவுலியாங் டாய், ஐசிபிசி தலைவர் லின் லியாவோ, சைனா காஸ்கோ ஷிப்பிங் தலைவர் மின் வான் உள்ளிட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர். ஹுவாவேய் மற்றும் அலிபாபா நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டையொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்கள், முக்கிய ஓட்டல்கள் மற்றும் பாரத் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளுடன் 2006-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்தது. 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்த நிலையில், பின்னர் இந்தோனேசியா முழு உறுப்பினராக இணைந்தது.
