அடுத்த ஆண்டு நிச்சயம் நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ், மொத்தம் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் பெங்களூரு அணிக்காக மட்டும் அவர் 156 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2011 முதல் 2021 வரையில் பெங்களூரு அணியில் அவர் இடம் பெற்றிருந்தார். நடப்பு சீசனில் அவர் விளையாடப் போவதில்லை என முன்னதாகவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த சீசனில் (ஐபிஎல் 2023) தனது வருகை குறித்து பேசியுள்ளார் டிவில்லியர்ஸ்.
“அடுத்த சீசனில் நான் நிச்சயம் இருப்பேன். ஆனால் அது எப்படி என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. இதனை விராட் கோலி உறுதிப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி. வரும் சீசனில் பெங்களூருவில் சில போட்டிகள் இருக்கும். அதனால் எனது இரண்டாவது வீட்டுக்கு திரும்புவதில் எனக்கு மகிழ்ச்சி. சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வாழும் அந்த காட்சியை காண நாம் மிகவும் ஆர்வமாக உள்ளேன். அணியில் மீண்டும் இணைவதை நான் மிகவும் விரும்புகிறேன். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்தும் உள்ளேன்” என தெரிவித்துள்ளார் டிவில்லியர்ஸ்.
முன்னதாக, பேட்டி ஒன்றில் அடுத்த சீசனில் டிவில்லியர்ஸ் அணியில் இருப்பார் என சொல்லி இருந்தார் விராட் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிவில்லியர்ஸ் மற்றும் கெயிலுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருது கொடுத்து கவுரவித்திருந்தது ஆர்சிபி. நடப்பு சீசனில் அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.