ஆப்கானை கைப்பற்றியாகிவிட்டது அடுத்ததாக காஷ்மீர் தான். தீவிரவாத அமைப்புகளுக்கு அல்கொய்தா அழைப்பு
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதற்காக தாலிபான்களை பாராட்டியிருக்கும் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு, அடுத்ததாக காஷ்மீர் விடுதலைக்காக போராட வேண்டும் என தீவிரவாத அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பையும் அதன் தலைவர் ஒசாமா பின்லேடனையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 1988ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு கொடிய நாச செயல்களில் ஈடுபட்டு வந்தது. 1996 முதல் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது, அந்த சமயத்தின் தாலிபான்களின் நண்பர்களாக திகழ்ந்த அல்கொய்தா அமைப்பினர் உலகின் வல்லரசு சக்தியாக திகழ்ந்து வந்த அமெரிக்காவில் 2001ம் ஆண்டு பெண்டகன், உலக வர்த்தக மையம் போன்ற முக்கிய இடங்களை விமானங்களை கொண்டு மோத வைத்து தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவையே அதிரவைத்த இந்த சம்பவத்துக்கு காரணமாக இருந்த அல்கொய்தா அமைப்பினருக்கு, தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததற்காக தான் அமெரிக்கா ஆப்கானில் புகுந்து தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக அல்கொய்தா அமைப்பினர் வேட்டையாடப்பட்டனர். ஒசாமா பின்லேடனும் கொல்லப்பட்டார். 20 ஆண்டுகளாக தாலிபான்களுக்கு எதிராக தொடர்ந்து கொண்டிருந்த இந்த போர் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருந்ததால் ஆப்கனை விட்டு வெளியேற அமெரிக்கா முடிவெடுத்து அதற்கான ஒப்பந்தமும் தாலிபான்களுடன் ஏற்பட்டது. இந்தநிலையில் தான் ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றினர்.
தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியதற்காக அல்கொய்தா அமைப்பினர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்திருக்கின்றனர். அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்காவை அவமானப்படுத்தி விரட்டியிருக்கும் தாலிபான்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
ஆப்கனைவிட்டு அமெரிக்காவை விரட்டியிருப்பதன் மூலம் உலகளாவிய வகையில் அமெரிக்காவின் மரியாதை சிதைக்கப்பட்டிருக்கிறது, இந்த பெருமை இறைவனையே சேரும்.
ஆப்கானை கைப்பற்றியாகிவிட்டது அடுத்ததாக காஷ்மீர், பாலஸ்தீனம், சோமாலியா, ஏமன் போன்ற இஸ்லாமிய நிலங்கள் அனைத்தும் இஸ்லாமிய எதிரிகளிடமிருந்து விடுவிக்க வேண்டும் என அல்கொய்தா அமைப்பினர் தீவிரவாத அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
தோஹாவில் தாலிபான் பிரதிநிதியுடன் முதல் முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் இந்தியா, ஆப்கன் மண்ணை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கும், தீவிரவாதத்துக்காகவும் எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்திருந்தார் இந்திய தூதர் தீபக் மிட்டல்.
இந்நிலையில் ‘காஷ்மீர் சுதந்திரம்’ என்று அல்கொய்தா அமைப்பினர் தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பது இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.