மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடிகர் சூரி குடும்பத்திற்கு சொந்தமான அம்மன் உணவகத்தை நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். சூரி குடும்பத்திற்கு எப்படி, எதற்காக மருத்துவமனை வளாகத்தில் அந்த உணவகம் நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது பற்றி அமைச்சர் விளக்கம் அளித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடிகர் சூரி குடும்பத்திற்கு சொந்தமான அம்மன் உணவகத்தை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அரசு மருத்துவனை டீன் ரத்தினவேல், நடிகர் சூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது: ”இந்த நிகழ்வில் பங்கேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். ஏனெனில் எங்கள் ஆட்சியின் மற்றும் எங்கள் முதல்வரின் சிறந்த அடையாளங்களாக கருத்துவப்படுவது திராவிட இயக்கத்தில் முதன்மையான மனிதநேயம் ஆகும். யாரையும் பின் தங்க விடக்கூடாது எல்லோருக்கும் சமவாய்ப்பு தர வேண்டும். துயரத்தில் இருப்பவர்களை கண்டுபிடித்து உதவி செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் மனிதநேயம் முதலாவதாக உள்ளது.
இரண்டாவது செயல்திறன், யார் வேண்டுமானாலும் வாயில் வடை சுடலாம். எத்தனையோ வாக்குறுதிகளை கொடுக்கலாம். ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை இதனை விரைவாக நிறைவேற்றி தந்துள்ளதோடு மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதி கொடுத்துள்ளோம். இந்த உணவகம் சாதாரண உணவகமாக தெரியலாம். ஆனால் இதன் பின்னால் மாபெரும் வெற்றி இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக இதே இடத்தில் இன்னொரு நபர் உணவகம் நடத்தி வந்தார். ஜனவரி மாதம் அவர்களின் டெண்டர் முடிந்த போது இந்த மருத்துவமனைக்கு அந்த உணவகம் மூலம் வந்து கொண்டிருந்த மாத வருமானம் ரூ.7,000 ஆகும். புதிதாக டெண்டர் விடப்பட்டு தற்போது அரசுக்கு இந்த மருத்துவமனைக்கு கிடைக்க உள்ள மாத வருமானம் ரூ.1 லட்சம் ஆகும். இரண்டாவது தரமான உணவு பொருட்களை குறைவான விலைக்கு கொடுப்பதை இலக்காக கொண்டு, ஏற்கெனவே துயரத்தில், உடல் ரீதியான பிரச்சனைகளோடு இங்கு வருபவர்களுக்கு குறைவான விலையில் தரமான உணவை தர வேண்டும் என யோசித்து வெளிப்படை தன்மையுடன் டெண்டர் விடப்பட்டு சிறப்பான நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த காலங்களில் என்னென்ன தவறுகள் நடைபெற்று இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். சிலர் தவறான நபர்கள் ஒப்பந்தத்தை போட்ட பிறகு நீதிமன்றம் சென்று வழக்கு போட்டு அதனை இழுத்தடிக்க நினைத்தார்கள். இந்த நல்ல விஷயத்தையும் அதன் மூலம் தடுக்க நினைத்தார்கள். ஆனால் நல்ல நீதிபதி, வழக்கறிஞர்கள், நேர்மையான அதிகாரிகள், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், அரசு மருத்துவமனை டீன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இதனை சிறப்பாக செய்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.