கோவையில் எட்டாம் வகுப்பு சிறுமி இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்தியதற்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கோபத்தில் சிறுமி வீட்டை விட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இணையதள பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாகவே அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துவருகிறது. குறிப்பாக கொரோனா ஊரடங்கின் போது இளம் சமுதாயத்தினர், முதியவர், சிறுவர்கள் என அனைவரும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகும் அளவிற்கு நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே ஆன்லைன் வகுப்புகள் மூலமும் சிறுவர்களின் கைகளுக்கு செல்போன்கள் கட்டாயமாக்கப்பட்டது .இந்த சூழலில் வகுப்பை தாண்டி பெரும்பாலான மாணவர்கள் வீடியோ கேம், சமூக வலைதள பயன்பாடுகள் ஆகியவற்றிற்கு அடிமையாகினர்.
இப்படியிருக்க பெற்றோர்கள் செல்போன் பயன்பாட்டை தடுக்க முற்பட்டால் தற்கொலை மிரட்டல் கொடுப்பது, தற்கொலை முயற்சி செய்வது, வீட்டை விட்டு வெளியேறுவது எனவும் சில மாணவர்கள் விபரீதமாக முடிவுகளை எடுக்கின்றனர்.
இந்த சூழலில் தற்போது கோவையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தந்தை இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை தட்டிக் கேட்டதற்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எட்டாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி அதிக நேரத்தை இன்ஸ்டாகிராமில் செலவிட்ட நிலையில் அவரின் தந்தை கண்டித்திருக்கின்றார்.
ஆனால் தந்தையின் பேச்சை கேட்காமல் சிறுமி தொடர்ந்து சமூக வலைதளத்தை பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த தந்தை அலைபேசியை பறித்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற செயலிகளை அழித்துள்ளார். தொடர்ந்து தந்தை சமூக வலைதளத்தை பயன்படுத்தாமல் படிக்கும்படி சிறுமியிடம் தெரிவித்துள்ளார்.
தந்தையின் கண்டிப்பை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி தனது வகுப்பு தோழியுடன் மாயமானார். பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு வராத நிலையில் கோவை மாநகர மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பள்ளிக்கு சென்ற சிறுமி பெற்றோர் மீதுள்ள கோபத்தில் ரயில் மூலம் சென்னையில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கோவை மாநகர போலீசாரின் அறிவிப்பின் பேரில் சென்னை மாநகர போலீசார் சிறுமிகளை மீட்டு குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைத்தனர். செல்போன் பயன்பாட்டை தந்தை தடுத்ததற்கு சிறுமி மாயமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.